மதுரை ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே மீண்டும் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளைக்காளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவரை சிறைக்குள்ளேயே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர், வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளைக்காளியை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதன் முதற்கட்டமாக ரூ.25 லட்சம் பெற்றுக்கொண்டு, தென் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டனை கைதிகளுடன் இணைந்து இந்த சதித்திட்டத்தை லாலி மணிகண்டன் தீட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சிறைத்துறையினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, லாலி மணிகண்டன், சீவலப்பேரியான், ரகுமான் மற்றும் அஜய் ஆகிய 4 பேரையும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில், வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கும், சீவலப்பேரியான் கடலூர் மத்திய சிறைக்கும், ரகுமான் திருச்சி மத்திய சிறைக்கும், அஜய் வேலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
லாலி மணிகண்டன் யார்?
வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் லாலி மணிகண்டன், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரும் பாமக பிரமுகருமான மாக்கா ஸ்டாலினின் சகோதரரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான மாக்கா ராஜா கொலை வழக்கிலும் லாலி மணிகண்டன் தலைமையிலான கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கோவை சிறையில் இருந்து வெளியே வந்த லாலி மணிகண்டன் உள்ளிட்டோர் சிந்தாமணி சிக்னல் அருகே காரில் சென்றபோது, ஒரு கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியது. அப்போது, ஓட்டுநர் ரவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, லாலி மணிகண்டனை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலின்போது லாலி மணிகண்டன் தப்பியோடிய நிலையில், அவரது அண்ணன் மாதவன், தியாகராஜன் மற்றும் அருண் ஆகிய மூவரும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தலைகளை துண்டித்து, நடுரோட்டில் கால்பந்து போல் உதைத்து சென்றதாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற லாலி மணிகண்டன், தற்போது சிறையில் இருந்து வருகிறார். ரவுடிகள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் நோக்கில், பணம் பெற்றுக்கொண்டு வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளைக்காளி மீது இது இரண்டாவது கொலை முயற்சி
வெள்ளைக்காளியை கொலை செய்ய முயற்சி நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஜனவரி மாதம், ஒரு வழக்கு விசாரணைக்காக வெள்ளைக்காளியை திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்ற போலீசார், பின்னர் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, உணவு அருந்துவதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, மதுரையைச் சேர்ந்த ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் பலத்த காயமடைந்த நிலையில், வெள்ளைக்காளி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலைச் சேர்ந்த அழகுராஜா என்ற கொட்டு ராஜாவை, சில நாட்களுக்கு முன்பு போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
2003-ஆம் ஆண்டு அதிமுக பிரமுகர் ராஜபாண்டியின் உறவினரான முனுசாமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 23 ஆண்டுகளாக நீடித்து வரும் பழிக்குப் பழி மோதலின் தொடர்ச்சியாகவே வெள்ளைக்காளியை கொலை செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…] இதையும் படியுங்க:- புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை … […]
[…] புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை …அதேபோல், தற்போதைய கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனை மீண்டும் திமுக பக்கம் இழுக்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீது போக்சோ போன்ற சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சி அவர்களைக் கூட்டணியில் இருந்து கழற்றிவிட பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]