உலகளாவிய பருவநிலை மாற்றங்களைக் குறிக்கும் “எல் நினோ” என்ற சொல் தற்போது இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்திலும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உருவாகும் சவால்கள் மற்றும் அதற்கு மத்தியில் பசுமை தரும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பங்கு குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளன.
உலகளாவிய பருவநிலை மாற்றங்களான எல் நினோ விளைவு மற்றும் அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் இயற்கை சார்ந்த புதிய நம்பிக்கையை அளித்து வருகின்றன.
பசிபிக் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் எல் நினோ விளைவு, உலக வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் நேரடி தாக்கமாக, இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், அண்டார்டிகா பகுதியில் நிலவும் தீவிர வெப்ப அலை காரணமாக பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருகின்றன. இதன் விளைவாக கடல் மட்ட உயர்வு ஏற்பட்டு, பூமியின் இயற்கை சமநிலைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
திருநெல்வேலியைப் பொறுத்தவரை, கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாத வெப்பம் பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை நிலவும் சூழலில், திருநெல்வேலி நகர்ப்புறங்களில் வெயிலின் தாக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று திருநெல்வேலியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி மக்களை கடுமையாக வாட்டியது. இதற்கு முன்பு 1998 ஆம் ஆண்டு 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்டை மாவட்டமான தூத்துக்குடியில் 102 டிகிரியும், மதுரையில் 105 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஆனால் இந்த வரண்ட சூழ்நிலையிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான பொதிகை மலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட அடர்ந்த பசுமை நிறைந்த பகுதிகளில் ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
நாலுமுக்கு பகுதியில் இதுவரை 35 சென்டிமீட்டர் மழைப்பொழிவும், ஊத்து பகுதியில் 31 சென்டிமீட்டர் மழைப்பொழிவும், காக்காச்சியில் 23 சென்டிமீட்டர் மழைப்பொழிவும், மாஞ்சோலையில் 15 சென்டிமீட்டர் மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது. இதேபோல், பாபநாசம் பகுதியில் 9 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
எனினும், இந்த மழைப்பொழிவு பெரும்பாலும் மலைப் பகுதிகளில் மட்டுமே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமவெளிப் பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாத நிலை தொடர்கிறது. இருப்பினும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது என்பது ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.
இதற்கிடையில், எல் நினோ காரணமாக ஏற்படக்கூடிய வறட்சி சவால்களை எதிர்கொள்ள மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் புதுதில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்களை ஒருங்கிணைத்து அவசர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பருவமழை குறையும் மாவட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து, விவசாயிகளுக்கு உதவ பயிர் வாரியான அவசரகால திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் மேலாண்மை முறைகள், ஊடுபயிர் சாகுபடி, மாற்றுப் பயிர் சாகுபடி மற்றும் பருப்பு வகை பயிர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தாமல், அறிவியல் அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பசுமையைப் பேணினால் மட்டுமே எல் நினோ போன்ற உலகளாவிய வறட்சி அச்சுறுத்தல்களில் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்பதை தற்போதைய சூழ்நிலை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
இதற்கிடையில், மதுரையில் நேற்று 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், திருநெல்வேலியில் 104 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரியும், திருத்தணியில் 104 டிகிரியும் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், வளம் கொழிக்கும் தாமிரபரணி நதியை தூய்மையாகப் பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், இயற்கையைப் பேணியும், காடுகளை வளர்த்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தும் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற இயற்கை சவால்களிலிருந்து நீண்டகால பாதுகாப்பைப் பெற முடியும் என்பதே இந்த நிகழ்வுகள் உணர்த்தும் முக்கியமான செய்தியாகும்.
