Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள மேலக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சண்முகவேல். விவசாயியான இவர், சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்து விறகுகளைச் சுமந்து கொண்டு கால்நடையாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மேலக்கல்லூர் சுடலைமாடன் கோவில் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சண்முகவேலை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சண்முகவேலின் தலை, கை, கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டித் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல், இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து வலியால் அலறித் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை கண்ட அந்த கும்பல், இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பி ஓடியது.

இதையும் படியுங்க  விவசாயிகளுக்கு இலவசம் - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!”

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகவேலை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சண்முகவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுத்தமல்லி காவல்துறையினர், சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலைக்கான அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு சண்முகவேலின் குடும்பத்தினர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சண்முகவேலுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பின்னர் முன்விரோதமாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த முன்பகை காரணமாக கடந்த ஓராண்டாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதத்தின் உச்சகட்டமாகவே சம்பவத்தன்று இரவு சண்முகவேல் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "கல்வி கற்கும் வயதில் சாதி நஞ்சா? நெல்லையை ரணகளமாக்கிய பள்ளி மாணவர்களின் இன்ஸ்டா ரீல்ஸ் மோதல்!"

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இரவு முழுவதும் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில், இந்த கொலையில் தொடர்புடையதாக மேலக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன், இசக்கிமுத்து, சிவசங்கரன், மாரிச்செல்வம் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம், இந்த கொலைச் சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து சுத்தமல்லி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாள் கேக் வெட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  மருந்துக்கடைகள் திடீர் அடைப்பு… பொதுமக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago