ராணுவ வீரர் மகேஷ்குமார் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியாவுக்கும் பூவரசன் என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததை அறிந்த மகேஷ்குமார் தட்டி கேட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை செல்லும் சாலையில் கடந்த 11 திங்கள் கிழமை அன்று காலை ஆலப்பட்டி ஊராட்சி பூவத்தி பகுதியில் எரிந்து கருகிய நிலையில் சடலம் கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சடலம் கிடந்த பகுதியில் தடயம் தேடி ஆய்வு செய்தபோது அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் மற்றோரு சடலமும் கருகிய நிலையில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரு உடலின் மீது பெட்ஷீட்டை சுற்றி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதை தடயவியல் துறையினர் உறுதி செய்த பின்னர் உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமணி, கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எந்த ஊர்? கொலையாளி யார்? எதற்காக கொள்ளப்பட்டார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணயை தொடங்கி, 5 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
பக்கத்து மாவட்டங்களான தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளதா? என்று காவல் நிலையங்களில் ஆய்வு செய்த தனிப்படையினரின் தீவிர விசாரணையில் அதே பகுதியில் இருவர் காணாமல் போனதாக விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை செயப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான மகேஷ்குமாரும், அவரது தந்தை செல்லப்பன் என்பதும் தெரியவந்தது.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியாவுக்கும் பூவரசன் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததை தெரிந்துகொண்ட மகேஷ்குமார் பானுபிரியாவை கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து மகேஷ்குமார் வீட்டுக்கு வந்த பூவரசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட சண்டையில் மகேஷகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்த பூவரசன், மகேஷ்குமாரின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தந்தை செல்லப்பனையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதற்கு பானு பிரியாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
அதன் பின்னர் இரவு நேரத்தில் இரு சடலங்களை தனித்தனியாக ஸ்கூட்டரில் எடுத்து வந்து ராயக்கோட்டை சாலையில் உள்ள கொடுகூர் மற்றும் வெப்பாளம்பட்டி பகுதியில் தென்னை ஓலைகளை உடல் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததை காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து கள்ளக்காதலன் பூவரசனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பானுப்பிரியாவையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொலைக்கு உதவிய அவரது 10 வயது மகனையும் கைது செய்து மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
