https://republictn.com/

“அதிகாரிகளைத் தங்கள் விரல் நுனியில் ஆட்டி வைப்பதுதான் பொதுவாக அமைச்சர்களின் பாணி. ஆனால், தமிழ்நாட்டின் மிக முக்கியத் துறை ஒன்றில், ஒரு பெண் அதிகாரி ஒட்டுமொத்த அமைச்சரையே தன் கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கிறார்!” என்ற பகீர் தகவல் அதிர வைத்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய த.வெ.க ஆட்சியாக இருந்தாலும் சரி… தலைமைச் செயலாளர் முதல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வரை ஏகப்பட்ட மெகா ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டு வரும் நிலையிலும், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் சுப்ரியா சாகு ஐஏஎஸ்-ஐ மட்டும் யாராலும் அந்தத் துறையில் இருந்து நகர்த்த முடியவில்லை. “அவர் நினைத்தால் மட்டும்தான் துறை மாறுவார், இல்லையென்றால் அவரேதான் சூப்பர் சிஎம்” என்று பேசப்படும் அளவுக்கு அவரது பிடி இறுகியுள்ளது.

“நான் சொல்றபடிதான் அமைச்சரே நடப்பாரு!”
சமீபத்தில் வனத்துறை சார்பில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துறை சார்ந்த அமைச்சர் ரஞ்சித் குமாரின் தலைமையில் நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்தில், அமைச்சர் அரங்குக்குள் நுழைவதற்கு முன்பே கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அதிகாரிகளுக்குக் கொடுத்த ‘அலர்ட்’ அங்கிருந்தவர்களை வாயடைக்க வைத்துள்ளது.

அதிகாரிகளைப் பார்த்து அவர் மிகத் துணிச்சலாக, “இங்கே நான் சொல்றபடிதான் எல்லாம் நடக்கணும். அமைச்சரும் நாம சொல்றபடிதான் நடப்பாரு. இந்த ஆலோசனைக் கூட்டத்தையே என்னைத்தான் நடத்தச் சொல்வாரு. அதனால நான் சொல்ற இன்ஸ்ட்ரக்ஷனை மட்டும் ஃபாலோ பண்ணுங்க” என்று ஓப்பனாகவே காய் நகர்த்தியுள்ளார்.

சொன்னபடியே நடந்த அமைச்சர் ட்விஸ்ட்
அதிகாரிகள் அனைவரும் சுப்ரியா சாகு சொன்னதைக் கேட்டு ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று விக்கித்து நின்ற வேளையில், கூட்ட அரங்குக்குள் என்ட்ரி கொடுத்தார் அந்தத் துறை சார்ந்த அமைச்சர். அடுத்த சில நிமிடங்களில் அங்கே அரங்கேறிய காட்சி, சுப்ரியா சாகுவின் அசுர அதிகார பலத்தை அக்குவேறு ஆணி வேறாக நிரூபித்தது. கூட்டத்தில் பேசத் தொடங்கிய அமைச்சர் ரஞ்சித் குமார், “மேடம் (சுப்ரியா சாகு) சொல்றதைக் கேளுங்க… துறையைச் சிறப்பா வச்சிருக்கணும்” என்று சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டு, சுப்ரியா சாகு முன்னரே சொன்னதைப் போலவே, கூட்டத்தை முழுமையாக வழிநடத்தும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துவிட்டு அமைதியானார்.

சுப்ரியா சாகு சாம்ராஜ்யம்
முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் பலத்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். ஆனால், இத்தனை இரும்புத் திரைகளையும் தாண்டி, முந்தைய திமுக ஆட்சியில் செல்வாக்கோடு வலம் வந்த சுப்ரியா சாகுவின் சாம்ராஜ்யம் த.வெ.க ஆட்சியிலும் அசைக்க முடியாத உயரத்தில் இருப்பதுதான் கோட்டை அதிகாரிகளைப் பெருத்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரை விட, ஒரு அதிகாரத்துவ அதிகாரிக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைப்பதும், அமைச்சரே அதை ஆமோதிப்பதும் நிர்வாக ரீதியாக எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

சுப்ரியா சாகுவின் இந்த அசுர அதிகாரப் போக்கு முதலமைச்சர் விஜயின் கவனத்திற்குச் செல்லுமா? அல்லது அமைச்சரைத் தாண்டி வனத்துறையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்தத் தனி ஆவர்த்தனம் இன்னும் தொடருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago