https://republictn.com/

எம்ஜிஆரையே தோற்கடித்தவர்கள் சென்னை மாநகர மக்கள். உங்களுக்கு அமோக ஆதரவு அளித்தது ஏன்? என மூத்த பத்திரிகையாளர் ம.வி.ராசதுரை முதல்வர் விஜய்க்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “பள்ளிக்கூடம் மற்றும் கோயில் அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றியுள்ளீர்கள். நன்றி, பாராட்டுகள். ஆனால், இந்த நடவடிக்கை போதாது.! சென்னை மாநகரத்தில் கடந்த 55 ஆண்டுகளாக வசிக்கும் பத்திரிக்கையாளன் நான். பிரபல நாளிதழின் செய்தியாளராக சென்னை மாநகரம் முழுவதும் -செய்தி சேகரிப்பதற்காக பயணித்து உள்ளேன்.அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

மகத்தான மக்கள் செல்வாக்கு கொண்டவரான எம்ஜிஆர் முதன் முதலாக தமிழக சட்டமன்றத் தேர்தலை 1977 ஆம் ஆண்டு சந்தித்துத் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஆனார். ஆனாலும், அந்த சமயத்தில், அவரே எதிர்பாராத வகையில் சென்னை மாநகரத்தில் அவருடைய கட்சி படுதோல்வியை சந்தித்தது. திமுக சென்னையில் அமோக வெற்றி பெற்றது.

அன்றிலிருந்து நடந்து முடிந்த இந்தத் தேர்தல் வரை சில சிறு சறுக்கல்கள் இருந்தாலும் சென்னை மாநகரம் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. அதனால்தான் கலைஞர், பேராசிரியர் உள்ளிட் ட திமுக முன்னணி தலைவர்கள் பெரும்பாலும் சென்னை நகரிலேயே போட்டியிட்டார்கள்.

அப்படிப்பட்ட சென்னை மாநகரத்தில் இன்று திமுக படுதோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய முற்பட்டபோது, தோல்விக்கான மிக முக்கியக் காரணம் தெரிய வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய பிறகு தான் சென்னை மாநகரம் வேகமாக வளரத் தொடங்கியது. அதுமுதல் உழைக்கும் வர்க்கம் படிப்படியாக இங்கு குடியேறி வாழத் தொடங்கியது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர் தான்.

இந்த மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதி மாற்று வாரியம் தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி வீடுகளில்தான் பாட்டாளி மக்கள் வசிக்கின்றனர்.
இத்தகையக் குடியிருப்புகள் சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக உள்ளன. குடிசை வீடுகளை அகற்றி அடுக்குமாடிகள் கட்ட முடியாத இடங்களிலும் இநதப் பிரிவு மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். தென் சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் இந்த மூன்று இடத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

சென்னையில் உள்ள வாக்காளர்களில் பாதிக்கு மேல் இந்த மக்கள் தான். இவர்களில் 90 சதவீதம் பேர் தவறாமல் வாக்குப்பதிவு செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் குடும்பங்களில் சுமார் 75 சதவீத குடும்பங்கள் டாஸ்மாக் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளதை இப்பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இங்கு வசிக்கும் ‌ 18 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதையும் காலப்போக்கில் அவர்கள் குடி நோயாளிகளாக மாறிப் போவதையும் அறிய முடியும்.

2001- 06 காலகட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள் கடந்த 20 ஆண்டுகளில் தமிழக இளைஞர்களின் மனித வளத்தை சூறையாடிவிட்டது. இந்தப் பாதிப்பு சென்னையில் மிக மிக அதிகம் ஆகும். மற்ற விஷயங்களில் எதிரும் புதிருமாக இருந்த திமுகவும் அ திமுகவும் டாஸ்மாக் மதுவில் கைகோர்த்து செயல்பட்டன. மது ஆலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு சப்ளை செய்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர். இதன் இன்னொரு விளைவு மக்களின் உடல் நலம் பாழானது.

இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ,ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு குடும்பத் தலைவிக்கு உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதை மக்கள் ஏற்கவில்லை. பானையின் கீழே உள்ள ஓட்டையை அடைக்காமல் மேலிருந்து தண்ணீர் ஊற்றி பானையை நிறைக்க முயன்றால் முடியுமா? டாஸ்மாக் மது சீரழிவுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நலத்திட்டங்களை செயல்படுத்தியது விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே, லட்சக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சீரழிவுக்கு ஒரு நல்ல தீர்வு காணுங்கள். காமராசர், அண்ணா போன்ற முதலமைச்சர்கள் மது வருமானம் இல்லாமல் எப்படி வெற்றிகரமாக ஆட்சியை நடத்தினார்கள் என்பதையும் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபான விற்பனை உண்மையிலேயே அரசுக்கு லாபமா? என்பது குறித்தும் ஆய்வு செய்யுங்கள். ஒரு நிபுணர் குழு அமைத்து டாஸ்மாக் மதுபான கடைகளால் ஏற்பட்ட சமூக சீரழிவு குறித்து மதிப்பீடு செய்யுங்கள்.

‌ குடியைக் கெடுக்கும் மதுவை விற்கும் செயல் அரசின் உடையதாக இருக்கக் கூடாது! என்ற உத்தரவிலிருந்து உங்கள் நலத்திட்டங்கள் தொடங்கட்டும், வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago