Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Diwali

தீபாவளி பண்டிகையன்று தமிழ்நாட்டில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாட்டைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு புதிதாக விதிக்கப்பட்டதல்ல. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு முதல் கடந்த எட்டு ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இதே நேரக் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.

வட மாநிலங்களில் தீபாவளி பெரும்பாலும் இரவு நேரத்தில் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இந்தப் பண்பாட்டு வழக்கத்தைக் கருத்தில் கொண்டே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கத் தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  கீழடியில் கொந்தளிப்பு..! நிலைகுலைந்த கிராம மக்கள்..! தமிழர்களின் தாய்மடியில் நாளை நடக்கப்போகும் ட்விஸ்ட்..!

இந்த நேரக் கட்டுப்பாட்டுடன், பட்டாசு வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்த ஒலி எழுப்புவதுடன், குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் CSIR-NEERI சான்றளித்த பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் சரவெடிகள் உள்ளிட்ட தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய கூட்டுப் பட்டாசுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் விற்கப்படும் போலியான பட்டாசுகளைத் தவிர்த்து, உண்மையான பசுமைப் பட்டாசுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசல் பசுமைப் பட்டாசுகளை அடையாளம் காண, அவற்றின் பெட்டிகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான NEERI வழங்கிய பிரத்யேக QR குறியீடு இடம்பெற்றிருக்கும். அதனைப் பொதுமக்கள் தங்களது செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பட்டாசின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், எளிதில் தீப்பற்றக்கூடிய குடிசைப் பகுதிகள், காலி மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்… ஆனால் மாணவன் உயிரிழந்த சோகம்

பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பாகத் தனித்தனியாகப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து, உள்ளூர் குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWA) மூலம் ஒன்றிணைந்து திறந்தவெளி மைதானங்களில் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேசிய பசுமைப் படை (NGC) மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் (Eco-Clubs) வாயிலாக மாவட்ட வாரியாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை வெடித்து, சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்க  சீறும் சிங்கப்பெண்கள் படை.. குற்றவாளிகளுக்கு நடுக்கம்! தொடக்க விழாவில் CM விஜய் முழு உரை!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 minutes ago at 35 minutes ago