Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Keezhadi

உலகப் புகழ்பெற்ற கீழடி என்றாலே தமிழர்களின் தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்களின் தாய்மடியான கீழடியில், சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் அர்ச்சுன லிங்கேஸ்வரர் சிவன் கோயிலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் அய்யனார் கோயிலும் அமைந்துள்ளது. கீழடியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் அய்யனார் கோயிலில் நீண்ட காலமாக வழிபாடு நடைபெறவில்லை என்பது பொதுமக்களின் வேதனையாக இருக்கிறது.

இந்நிலையில், கடவுளை வழிபடுவதற்கே இத்தனை தடைகளா? கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதற்குக் கூட இவ்வளவு போராட்டமா? என்ற கேள்விகள் தற்போது கீழடி மக்களிடையே எழுந்துள்ளன.

15 ஆண்டுகளாக முடங்கிய வழிபாடு… வேதனையில் மக்கள்!
கீழடியில் உள்ள அய்யனார் கோயிலில் ஆரம்ப காலங்களில் திருவிழாக்களும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிலரின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சுயநலப் போக்குகளால் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வழிபாடு தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தங்களது ஊரின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனாரை மீண்டும் முறையாக வழிபட வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. இதற்காக இளைஞர்களும், பெரியவர்களும் ஒன்றிணைந்து கோயிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில், கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக நீடித்த பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும். இனியாவது கோயிலில் வழிபாடு தொடங்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இருந்துள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கைக்கும் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி தூங்கும்போதே கொடூர கொலை: 48 மணி நேரத்தில் 3வது கொலையால் அதிரும் சிவகங்கை!"

குறிக்கப்பட்ட கும்பாபிஷேகத் தேதி… திடீரென ரத்து!
கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடி ஆலோசித்து விழாவை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கும்பாபிஷேகத் தேதியை முடிவு செய்யத் திட்டமிடப்பட்டனர். ஆனால், கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனச் சிலர் வதந்தியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கூட்டத்தை ரத்து செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கேதான் முக்கியமான கேள்வி எழுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற புகார் அளிக்கப்பட்டால், அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்வதுதான் தீர்வா?

புகார் அளித்தவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே நேரத்தில், கோயிலில் வழிபாடு நடத்த விரும்பும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கைகளும் கேட்கப்பட வேண்டாமா? இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து, பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்பதுதானே காவல்துறையின் பொறுப்பாக இருக்க முடியும்?

ஒருதலைப்பட்ச நடவடிக்கையா?
ஒருபுறம் கோயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மறுபுறம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  "எங்களையும் ஏமாத்திட்டாங்க..." கிராமம் கிராமமாக கதறும் மக்கள் - தமிழ்நாடே அதிரும் FQL மெகா மோசடி! குவியும் 7000+ புகார்கள்!

இந்தச் சூழலில், காவல்துறை உண்மையில் இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டதா? புகார் அளித்தவர்களின் குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட்டனவா? கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடம் விளக்கம் பெறப்பட்டதா? கூட்டத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, காவல்துறை பாதுகாப்புடன் கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டனவா?

காவல்துறையின் முதன்மையான பொறுப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமைதியாகத் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க விரும்பும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது.

புகார் கொடுத்தவர்களின் அச்சம் மட்டுமே முக்கியமா? பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா? கீழடி மக்கள் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்குக் காவல்துறை உரிய விளக்கமளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அய்யனாரை பிரதிஷ்டை செய்ய இத்தனை தடைகளா?
கோயிலைப் புனரமைத்து, வெளியே வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அய்யனார் சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. இதற்காக இளைஞர்களும், பெரியவர்களும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர். பல ஆண்டுகளாகத் தடைப்பட்ட வழிபாடு மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு, கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் கூட்டத்தை ரத்து செய்வது அல்லது மக்களின் கோரிக்கையைத் தள்ளிப்போடுவது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது.

இதையும் படியுங்க  “பெட்ரோல் விநியோகம் பாதிப்பா? HPCL டிரைவர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்!”

அறவழிப் போராட்டத்திற்கும் நெருக்கடியா?
கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கையைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், அக்டோபர் 18ஆம் தேதி கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதி முன்பாக அமைதியான அறவழிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், போராட்டத் திட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கீழடி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும், இதனால் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க மக்கள் திட்டமிட்டால், அதனைச் சட்ட வரம்புகளுக்குள் நடத்துவதற்கான வழிகளை அதிகாரிகள் ஆராய வேண்டாமா?

போராட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கான இடையூறுகள் போன்றவற்றைச் சட்டப்படி பரிசீலிப்பது காவல்துறையின் உரிமை, கடமை. அமைதியான எதிர்ப்பை முன்கூட்டியே ஒடுக்குவதும் ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல.

தலையிடுமா தமிழக அரசு?
கீழடி என்பது தமிழகத்தின் தொன்மை வரலாற்றோடு தொடர்புடைய முக்கியமான இடம். அத்தகைய பகுதியில் கோயில் வழிபாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை, கிராம மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 minutes ago at 3 minutes ago