மனைவியை கோபத்தில் “முட்டாள்” அல்லது “பயனற்றவள்” என்று திட்டுவது கணவரின் கோபக் குணத்தைக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், இதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 498A-ன் கீழ் குற்றவியல் கொடுமையாகவோ, தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகவோ கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், திருமணத்தின்போது அல்லது பண்டிகைக் காலங்களில் குடும்ப வழக்கப்படி வழங்கப்படும் நகைகள் மற்றும் பரிசுகளை வரதட்சணையாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பியூஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், 2022ஆம் ஆண்டு இருவரும் கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர். இந்நிலையில், 2023ஆம் ஆண்டு பியூஷின் மனைவி அங்கு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், படிப்பை முடித்தும் ஓராண்டாக வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியே தனது தற்கொலைக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது மகளின் மரணத்துக்குக் கணவர்தான் காரணம் எனக் கூறி அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பியூஷ் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணவர் தன்னை அடிக்கடி “முட்டாள்”, “வேலைக்கு ஆகாதவள்” என்று திட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், கனடாவின் டொராண்டோ காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டனர். 2024ஆம் ஆண்டு அவர்கள் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், பெண்ணின் மரணத்தில் எந்தவிதமான சதித்திட்டமோ அல்லது பலவந்தமாகத் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் அவரது கணவர் வீட்டில் இல்லை என்பதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உறுதிப்படுத்தின. தற்கொலைக் கடிதத்தில் இடம்பெற்றிருந்த கையெழுத்தும் அந்தப் பெண்ணுடையதுதான் என்பதை தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர். அந்தக் கடிதத்தில், படிப்பை முடித்தும் வேலை கிடைக்காததால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பியூஷ் தரப்பில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து, குற்றவியல் விசாரணையைத் தொடர உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பியூஷ் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கணவர் கோபத்தில் மனைவியை “முட்டாள்” அல்லது “பயனற்றவள்” என்று திட்டியிருப்பது அவரது குணநலன் அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், அத்தகைய வார்த்தைகளை மட்டும் வைத்து அது குற்றவியல் கொடுமை என்றோ, மனைவியின் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்தது என்றோ முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தது.
மேலும், திருமண வாழ்க்கையில் கொடுமை நடந்ததாகப் பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பது போதாது என்றும், அதனை நிரூபிக்க குறிப்பிட்ட சம்பவங்களும் உறுதியான ஆதாரங்களும் அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. வெறும் வாய்மொழிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது என்றும் தெரிவித்தது.
வரதட்சணை தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்கப்பட்டதற்கான சிறிய ஆதாரம்கூட இந்த வழக்கில் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் குடும்ப வழக்கப்படி வழங்கப்பட்ட நகைகள் மற்றும் பெண்ணின் பயணத்திற்காகப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை வரதட்சணையாகக் கருத முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும், வரதட்சணை மரணம் தொடர்பான குற்றச்சாட்டை நிரூபிக்க, மரணத்திற்கு முன்பாக வரதட்சணை கோரி துன்புறுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் வலுவான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விளக்கியது. ஆனால், இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியது.
மகளை இழந்த தந்தை, அந்தத் துயரத்தின் காரணமாகக் கணவர் மீது பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாகக் கூறிய நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாமல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, பியூஷுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR), குற்றவியல் வழக்குகள் மற்றும் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை உள்ளிட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மனைவியை “முட்டாள்”, “பயனற்றவள்” என்று திட்டுவது மட்டும் குற்றவியல் கொடுமையாகாது என்றும், வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தெளிவான சம்பவங்களும் வலுவான ஆதாரங்களும் அவசியம் என்றும் இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
