மாண்புமிகு அமைச்சர்கள், மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
சில நிகழ்வுகள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அவற்றை நினைத்தாலே மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இன்று ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’யை தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சி. இது உண்மையிலேயே மனதிற்கு நெருக்கமானதும் மகிழ்ச்சியளிப்பதும் ஆகும்.
நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண் குழந்தைகள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று நாம் கூறியிருந்தோம். அது வெறும் தேர்தலுக்காக கூறப்பட்ட வாக்குறுதி அல்ல; மனப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வழங்கப்பட்ட உறுதிமொழியாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடுமைகள் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’ என்பதுதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூறியதைச் செயல்படுத்த வேண்டும் என்ற தெளிவுடன், ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் பெண் குழந்தைகளும் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மனநிறைவை அளித்தாலும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் சில கொடூரமான சம்பவங்களை கேட்கும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. ஏனெனில் பாதிக்கப்படுபவர்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
அந்த ஆய்வின் முடிவில் தொடர்ந்து முன்னிலைப்படுவது போதைப்பொருள் நடமாட்டம்தான். அதை வேரோடு அகற்ற வேண்டும். இது இன்று அல்லது நேற்று தோன்றிய பிரச்சனை அல்ல. பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் விடப்பட்டதன் விளைவாகவே இந்தப் பிரச்சனை ஆழமாக வேரூன்றியுள்ளது. தற்போது முக்கியமானது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது அல்ல; பிரச்சனையை தீர்ப்பதுதான்.
போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழித்தால்தான் பெண்களின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும். போதைப்பொருள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த மூன்று துறைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதே நேரத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அது சமூக ஒழுக்கம் மற்றும் தனிமனித பொறுப்புணர்வுடனும் தொடர்புடையது. ஒவ்வொருவரும் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டால், சமூகம் தானாகவே நல்ல மாற்றத்தை அடையும்.
பெண்கள் கல்வி கற்கும் இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பயணங்களிலும் மற்றும் அன்றாட வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும் பயமின்றி, மரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது நமது முதல் இலக்காகும்.
இதுவரை நான் மென்மையாகப் பேசியிருந்தாலும், பெண்களைத் தொந்தரவு செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை தெரிவிக்க விரும்புகிறேன். பெண்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித சமரசமும் காட்டப்படாது.
அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். வழக்குகள் பதிவு செய்வது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வரை அனைத்தும் துரிதமாக நடைபெறும். அதே சமயம், எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்பதையும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகளுக்கே நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் அச்சம் ஏற்படும்.
இந்த ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’க்காக முதல்கட்டமாக 354 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் இந்தப் படை செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்க முன்கூட்டிய நடவடிக்கைகளில் இந்தப் படை முக்கிய பங்கு வகிக்கும்.
பெண்களைப் பின்தொடர்தல், பாலியல் தொல்லை, தொடர்ந்து தொந்தரவு செய்தல், கடத்தல் முயற்சி, பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல், பேருந்துகள் மற்றும் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் பெண்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற குற்றங்களைத் தடுப்பதில் இந்தப் படை தீவிரமாக செயல்படும்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் ரோந்து பணியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெண்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நமது அரசு நன்கு புரிந்துள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் நமது அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்.
ஒரு அரசின் நோக்கமும் இலக்கும் நேர்மையானதாக இருந்தால், அதன் திட்டங்களும் செயல்பாடுகளும் சரியான பாதையில் செல்லும். அதுபோன்ற அரசாகவே நமது அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தக் குறுகிய காலத்திலேயே ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’யை உருவாக்கி நடைமுறைப்படுத்த கடுமையாக உழைத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு அரசின் வெற்றி என்பது கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சியிலோ, பொருளாதார வளர்ச்சியிலோ மட்டும் இல்லை. அந்த மாநிலத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ்கிறார்களா என்பதில்தான் அந்த அரசின் உண்மையான வெற்றி இருக்கிறது. மற்ற அனைத்து வளர்ச்சிகளும் அதனுடன் இணைந்தவையாகும்.
அதற்காக நாங்கள் முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவோம். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
