Femi 9 GBC-3 கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், பெண் தொழில்முனைவோரின் சாதனைகளை மனதாரப் பாராட்டியதுடன், தனது முதல் சம்பளம் தொடர்பான நெகிழ்ச்சியான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் சிறப்பு நிகழ்வில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பங்கேற்பதாகக் குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், மேடையில் இருந்த ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் தெரிந்த உண்மையான சாதனைப் புன்னகையைப் பார்ப்பது தனக்குப் பெருமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
அந்த வெற்றிப் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் பெண்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அங்கு கூடியிருந்த பெண் தொழில்முனைவோர்களை “உண்மையான சிங்கப்பெண்கள்” எனக் குறிப்பிட்டு அவர்களை ஊக்குவித்தார்.
மேலும், எந்தவொரு தொழிலிலும் பணம் சம்பாதிப்பதைவிட, அதை முழு மனதோடு ஒரு நல்ல நோக்கத்திற்காகச் செய்யும்போது கிடைக்கும் மனநிறைவு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தனது தாயார், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மீனாகுமாரி குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த காலத்தில், அசோக் நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய தனது தாயார், டெட்ரா பேக் (Tetra Pak) நிறுவனத்தில் அவருக்கு தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்ததாகக் கூறினார்.
பள்ளி விடுமுறை நாட்களில் சும்மா இருக்க விரும்பாததால், ஏதாவது ஒரு வேலை செய்து அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பணியில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த நிறுவனத்தின் விளம்பர மற்றும் பிராண்டிங் பிரிவில், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வெளியே நின்று நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டதாகவும் கூறினார்.
அந்த வேலைக்காக ரூ.2,000 சம்பளம் கிடைத்ததாகவும், அந்தப் பணத்தை முதன்முதலாக தனது பாக்கெட்டில் வைத்தபோது, வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்டதுபோன்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
காவல்துறை அதிகாரியின் மகனாக இருந்தபோதிலும், தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த முதல் வருமானம் வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்றாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையில் கண்டிப்பான அதிகாரியாகப் பணியாற்றிய தனது தாயாரே, உழைப்பின் மதிப்பு, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற வேண்டிய மனப்பக்குவத்தை தனக்குக் கற்றுக் கொடுத்தவர் என்றும், தனது சினிமா பயணத்திற்கும் அவர் முக்கிய உந்துசக்தியாக இருந்ததாகவும் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

[…] […]