https://republictn.com/

கள்ளக்குறிச்சி பகுதியில், சிட்டுக்குருவி குஞ்சுகளின் பாதுகாப்பிற்காக தனது இருசக்கர வாகனத்தை 25 நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஒருவரின் மனிதநேய செயல், சமூக வலைத்தளங்களில் பலரது மனதை நெகிழச் செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் என்பவர், ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

“எங்கள் வீட்டில் இருந்த என் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டத் தொடங்கியது. ‘கூடுதானே கட்டுகிறது’ என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து பார்த்தபோது, அந்தக் கூட்டில் முட்டைகள் இருந்தன. முட்டையிட்ட பிறகு அந்தக் கூட்டைக் கலைக்க மனம் வரவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு குஞ்சு பொரித்தது. தினமும் தாய்க்குருவி அதற்குத் தேவையான இரையைத் தேடி வந்து குஞ்சுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு அந்தக் கூட்டைக் கலைப்பது ஒரு பாவச் செயல் என்று எனக்குத் தோன்றியது.

பரிசுத்த வேதாகமத்திலும் ஒரு குருவியையோ அதன் கூட்டையோ அழிப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பாவச் செயலை நான் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 25 நாட்களாக அந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறேன். அதை சிறிதளவும் நகர்த்தவில்லை.

எனது அன்றாட வேலைகளுக்குச் செல்ல சிரமம் இருந்தாலும், வேறு ஒரு வாகனத்தை பயன்படுத்தி வருகிறேன். ஒரு மனிதனின் வீட்டைக் கலைப்பதும், ஒரு குருவியின் கூட்டைக் கலைப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால்தான் அந்தச் சிறிய உயிர்களின் வாழ்வுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று இந்த முடிவை எடுத்தேன்.

இதைச் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கிறது. தினமும் சென்று அந்தக் குஞ்சைப் பார்ப்பது எனக்கு ஒரு தனி சந்தோஷமாக உள்ளது. நான் அருகில் சென்றவுடன் அந்தச் சிறிய குஞ்சு வாயைத் திறந்து மேலே பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி என் மனதை மிகவும் நெகிழ வைக்கிறது.”

சிறிய உயிரினங்களின் வாழ்வுக்கும் மனிதர்கள் அளிக்கும் அன்பும் மரியாதையும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதை கிறிஸ்டோபர் ஜெயகாந்தனின் இந்த செயல் எடுத்துக்காட்டுகிறது. தனது சொந்த வசதியைத் தியாகம் செய்து, ஒரு சிட்டுக்குருவி குடும்பத்தின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதிய அவரது மனிதநேயமும் கருணையும், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பலரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.

By Eswari

One thought on “சிட்டுக்குருவியின் வீடு..! ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்த கள்ளக்குறிச்சி பைக்! வைரலாகும் பின்னணி!””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago