https://republictn.com/

ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரைச் சேர்ந்த அனில் குமார் என்ற 27 வயது வாடிக்கையாளர், கடந்த 2023-ஆம் ஆண்டு பிரபல காலணி நிறுவனமான ரெட் டேப் ஷோரூமில் இருந்து ரூ.2,069 மதிப்பிலான கருப்பு நிற காலணிகளை வாங்கியுள்ளார்.

பில் செலுத்தும் போது, அவரது அனுமதியோ அல்லது முன்னறிவிப்போ இன்றி கேரி பேக்கிற்காக கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடை நிர்வாகத்திடம் அவர் கேள்வி எழுப்பியபோது, “இது நிறுவனத்தின் கொள்கை. கேரி பேக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறைதான்” என பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க மறுத்த அனில் குமார், நுகர்வோர் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.22 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ரெட் டேப் நிறுவனம், கேரி பேக்குகளுக்கு கட்டணம் வசூலிப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொறுப்பான நடைமுறையை ஊக்குவிப்பதற்கும், இலவச பைகளின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கும்தான் என்று விளக்கம் அளித்தது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பைகளை கொண்டு வருமாறு கடையின் நுழைவாயிலில் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், கேரி பேக் வாங்குவது முற்றிலும் விருப்பத்திற்குரியது என்றும் தெரிவித்தது. அதோடு, விற்கப்பட்ட பைகளில் எந்தவித நிறுவன லோகோ அல்லது விளம்பரமும் இடம்பெறவில்லை என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், ஜூன் 2026-ல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், வாடிக்கையாளரிடம் தேவையில்லாமல் ரூ.10 வசூலிக்கப்பட்டது சட்டவிரோதமானதும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகவும் இருப்பதாக ஆணையம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, ரெட் டேப் நிறுவனம் கேரி பேக் கட்டணமாக வசூலித்த ரூ.10-ஐ திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், சேவை குறைபாட்டிற்காக ரூ.4,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவுக்காக மேலும் ரூ.4,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதன்மூலம், ரெட் டேப் நிறுவனம் மொத்தமாக ரூ.8,010 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் முழுத் தொகையும் செலுத்தப்படும் வரை வாரந்தோறும் ரூ.50 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago