Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்து வருகிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இருவருக்கு பத்ம பூஷண் விருதும், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கே. ராமசாமி, மருத்துவத் துறையில் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், கலைத்துறையில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பொதுவார் திருத்தணி சுவாமிநாதன், திருவாரூர் பக்தவத்சலம், ரஞ்சனி பாலசுப்பிரமணியம் மற்றும் காயத்ரி பாலசுப்பிரமணியம், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிவசங்கரி, மருத்துவத் துறையில் மறைந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே மற்றும் கலைத்துறையில் ஆர். கிருஷ்ணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இதையும் படியுங்க  மகனை இழந்த தாய்… மரபை உடைத்த ஜனாதிபதி! நெஞ்சை உலுக்கும் ராஷ்டிரபதி பவன் நெகிழ்ச்சி காட்சி!

புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக்கலை ஆசான் மற்றும் பாரம்பரியக் கலை பாதுகாவலரான கே. பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவ மரபு மற்றும் மூலிகை அறிவை கால்நடை பராமரிப்பில் பயன்படுத்தி களப்பணியாற்றி வரும் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கில மருத்துவ அறிவியல் கோட்பாடுகளுடன் சித்த மருத்துவத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதற்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த 64 வயதான சிற்பி ராஜா, கடந்த 51 ஆண்டுகளாக சிற்பக் கலையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகத்தில் பயிற்சி பெற்ற அவர், இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக, ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட அவரது சிலைகள் தனித்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவருக்கும் பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் ஆர். கிருஷ்ணன், குறும்பா பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், பண்டிகைகள் மற்றும் வேட்டையாடும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு ஓவியங்களை வரைந்து வந்தார்.

இதையும் படியுங்க  நீதிபதி வீட்டில் கட்டு கட்டாய்ப் பணம்..! தீ விபத்தா? தில்லுமுல்லா..? நிரூபித்த விசாரணை ஆணையம்

அவரது கைவண்ணத்தில் உருவான குறும்பா ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமான அவருக்கும் மறைவுக்குப் பிறகு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago