பெங்களூருவில் பெற்றோர் மற்றும் தங்கையை, மூத்த மகள் தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே உள்ள சீகேஹள்ளி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48), மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, ஸ்வேதாவும் கென்னத்தும் கடந்த இரண்டு மாதங்களாக பெற்றோருக்குத் தெரியாமல் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்களது இந்த உறவுக்கு பெற்றோரும், இளைய மகள் சுப்ரியாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்வேதா சுமார் 30 லட்சம் ரூபாய் வரை வெளியில் கடன் வாங்கியிருந்ததாகவும், இதுதொடர்பாக பெற்றோர் அவரிடம் கேள்வி எழுப்பி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மாலை, ஸ்வேதா தங்கியிருந்த வீட்டிற்கு அவரது பெற்றோரும் தங்கை சுப்ரியாவும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஸ்வேதாவும் கென்னத்தும் இணைந்து மூவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் தாய் முத்துலட்சுமியை கொலை செய்துவிட்டு, ரத்தக் கறைகளை துடைத்து அவரது உடலை குளியலறையில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் தந்தை சோமசுந்தர் மற்றும் தங்கை சுப்ரியாவை தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த சோமசுந்தர், உயிர் தப்பிக்க வீட்டை விட்டு வெளியே வந்து அண்டை வீட்டாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரையும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
