தமிழகத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் அவ்வப்போது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப நிலை உயரும்
இன்று முதல் ஆகஸ்ட் 30 வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

