தமிழக அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ஒரு கோடி ரூபாய் அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 15, 2026-க்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 8-ஆம் தேதி சென்னையில் பிடிபட்டதாகக் கூறப்படும் 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் சார்பிலான சமூக வலைதளப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள ஆதவ் அர்ஜுனா தரப்பு, தனக்கும் ஜான் பிரிட்டோவுக்கும் எந்தவித குடும்பத் தொடர்பும் இல்லை என்றும், தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பு கோரியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தன்னைப் பற்றி இதுபோன்ற அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதற்கு திமுக தலைவர் மற்றும் திமுக ஐடி விங் மீது நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தங்களது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின்போது ஆதவ் அர்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம், முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜான் பிரிட்டோவை ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் எனக் குறிப்பிட்டு திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவை பின்னர் நீக்கிவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அந்தப் பதிவு வெளியிடப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கப்பட்டிருப்பது தங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இருப்பதாகவும் அவர் வாதிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
வழக்குத் தொடர்வதற்கு முன்பாக, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோருக்கு ஆதவ் அர்ஜுனா தரப்பில் 48 மணி நேரக் கெடுவுடன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுக தரப்பில் அளிக்கப்பட்ட பதில் நோட்டீஸில் மன்னிப்பு கோராமல், தங்களது சமூக வலைதளப் பதிவை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே, இந்த அரசியல் மோதலின் மற்றொரு பகுதியாக, மு.க.ஸ்டாலினின் மருமகன் வி. சபரீசன், கடந்த ஜூன் மாத இறுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தனிப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்திற்காக தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாக சபரீசன் அதில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நான் இதுவரை இருந்த எந்த இடத்திலும் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. திமுகவில் எனது பணி என்ன என்பது மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜான் பிரிட்டோ தொடர்பாக, திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில் அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமலாக்கத்துறை வெளியிட்ட எந்த அறிக்கையிலும் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னை ஜான் பிரிட்டோவுடன் தொடர்புபடுத்தி திமுக தரப்பு தகவல் பரப்பியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பு வாதிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா தரப்பு ஏற்கனவே சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜான் பிரிட்டோவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே அந்தப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது அரசியல் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அவதூறுப் பதிவு வெளியிடப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பதிவு தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டதல்ல என்றும், கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் திமுக ஐடி விங் மூலம் வெளியிடப்பட்டதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையிலேயே வழக்கின் இரு தரப்பிலும் முக்கிய வழக்கறிஞர்கள் ஆஜராகியிருப்பது, இந்த விவகாரம் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதை வெளிப்படுத்துகிறது.
திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே தொடர்ந்து நிலவி வரும் அரசியல் மோதலின் முக்கியமான பகுதியாக இந்த அவதூறு வழக்கு மாறியுள்ளது. தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பதில் என்ன என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
