உத்தரப் பிரதேசத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கித் பல்யான் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானாவைச் சேர்ந்த 32 வயதான அங்கித் பல்யான், உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி புதன்கிழமை மாலை சுமார் 7 மணியளவில், உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து வெளியேறி தனது ஸ்கார்பியோ காரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அங்கித் பல்யானை, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 முதல் 20 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், 5 குண்டுகள் அங்கித்தின் உடலில் பாய்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கித் பல்யான், கொலைச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்த அவரை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தக் கொலைக்கு ஒரு நிழலுலகக் கும்பல் சமூக வலைதளப் பதிவு மூலம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது எதிரி கும்பலுடன் அங்கித் பல்யான் தொடர்பில் இருந்ததாகக் கூறியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், அங்கித் பல்யான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுவதால், அரசியல் பகை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அண்டை மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்த நிழலுலகக் கும்பல்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அங்கித் பல்யான் தனது யூடியூப் பக்கத்தில் ஹரியான்வி பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர். அவரது யூடியூப் சேனலுக்கு 3.6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது பாடல்கள் மற்றும் வீடியோக்களில் துப்பாக்கிகள், சொகுசு கார்கள் மற்றும் நிழலுலக மோதல்கள் தொடர்பான காட்சிகளை அவர் அதிகளவில் பயன்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அவர் “கோர்ட் மே கோலி மாரேங்கே” என்ற ஹரியான்வி பாடலைப் பாடி வெளியிட்டிருந்தார். ‘நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொல்வோம்’ என்ற பொருளைக் கொண்ட இந்தப் பாடல் இணையத்தில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், அவர் நிஜ வாழ்க்கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் பல்யான் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி டெல்லி–முசாபர்நகர் சாலையில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. அப்போது அங்கித்தின் உடலைத் தனது மடியில் கிடத்தியபடி அவரது தாய் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் அங்கித் பல்யான் என்பதால், இந்தக் கொலை குறித்து அந்தச் சமூகத்தினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அங்கித் பல்யான், பிரபல யூடியூபரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான துஷார் பல்யானுடன் இணைந்து வெளியிட்ட ஹரியான்வி பாடல்கள் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
