Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வேலூர் மாவட்டம், சிறுகாஞ்சி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததால், இது கொடூரமான கொலை என்பது முதற்கட்டத்திலேயே தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பதும், அவர் பெயிண்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக, மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக வினோத்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் பழக்கமும் அவருக்கு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று மாலை, வினோத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சிறுகாஞ்சி பகுதியில் சுற்றித் திரிந்ததையும், பின்னர் இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தியதையும் சிலர் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதையும் படியுங்க  “முதலமைச்சரை பற்றி சமூக வலைதள கருத்துக்கு கைது நடவடிக்கையா?

வினோத்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தடயங்களை சேகரிப்பதற்காக ‘சாரா’ என்ற போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துச் சென்ற மோப்ப நாய், யாரையும் அடையாளம் காட்டவில்லை.

இதையடுத்து, வினோத்குமாருடன் கடைசியாக தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சம்பவத்தன்று சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும், வினோத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையும், அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததையும் போலீசார் அறிந்தனர்.

இதையடுத்து, ராகுலை தேடி சென்ற போலீசாருக்கு அவர் தலைமறைவாக இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் ராகுலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, திருமணமான பெண் ஒருவருடன் பழகிய விவகாரமே இந்தக் கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதையும் படியுங்க  "சேலம் நடுக்கொடுமை: சாக்கு மூட்டைகளில் பெண் உடல் பாகங்கள்.. சின்டெக்ஸ் தொட்டிக்குள் ஒளிந்திருந்த பயங்கரம் - யார் அந்தப் பெண்?"

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் வினோத்குமாரும், அதே பெண்ணுடன் ராகுலும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

“அந்த பெண்ணிடம் பேசவோ, பழகவோ கூடாது” என்று வினோத்குமார், ராகுலை பலமுறை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் இதே விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், ஆத்திரம் அடங்காத ராகுல், வினோத்குமாரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அன்று இரவு, வினோத்குமார் தனியாக விவசாய நிலத்தில் மது அருந்திக்கொண்டிருப்பதை அறிந்த ராகுல், அங்கு சென்று முதலில் இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை அரியூர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படியுங்க  பட்டப்பகலில் கஞ்சா போதை.. திருச்சியில் சீரழியும் மாணவர்கள்.. அதிர வைக்கும் வீடியோ..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago