Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தனது அதிகாரப்பூர்வ ரோந்துப் பணியை இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் 2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள் என மொத்தம் 6 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பிரத்யேக வாகனங்கள் மூலம் மாநகரப் பகுதி முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர் (மேற்கு) விஜயகுமார் அவர்கள் கொடியசைத்து ரோந்துப் பணியைத் தொடங்கி வைத்தார்.

பெண்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல், தொந்தரவு மற்றும் அத்துமீறல் சம்பவங்களைத் தடுப்பதே இந்தப் படையின் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படியுங்க  ரீல் நாயகனுக்காக களம் இறங்கிய ரியல் நாயகன்: 'ஜன நாயகன்' ரிலீஸுக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு!

இதன் ஒரு பகுதியாக, நெல்லை சந்திப்பில் பேருந்திற்காகக் காத்திருந்த மாணவிகளைச் சந்தித்த சிங்கப்பெண் படையினர், அவசர காலங்களில் தங்களை எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் பாதுகாப்பு உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் அல்லது அச்சுறுத்தல்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைப் பிடித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கவும் இந்தப் படையினர் செயல்படுவார்கள்.

எனினும், இவர்கள் நேரடியாக வழக்குப் பதிவு செய்வதோ அல்லது புலன் விசாரணை மேற்கொள்வதோ இல்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அவசர நிலைகள் அல்லது அச்சுறுத்தல்கள் குறித்து 100 மற்றும் 112 ஆகிய அவசர உதவி எண்களைத் தொடர்புகொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவியைப் பெறலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க  மேஜிக்கல்- மிராக்கிள் நடக்கப்போகிறது..! திமுக அலறப்போகிறது..! முதல்வர் விஜய் வியூகம்..!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழும் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்தச் சிறப்புப் படை தொடர்ந்து செயல்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago