https://republictn.com/

திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சதாம் ஹுசேன், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் பரஸ்பரமாக காதலித்து வந்த நிலையில், அந்த இளம்பெண் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கேட்டரிங் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, “கேட்டரிங் வேலைக்காக வெளியூர் செல்கிறேன், திரும்பி வர ஒரு வாரம் ஆகும்” என்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அந்த இளம்பெண் வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்குச் செல்லாமல் தனது காதலரான சதாம் ஹுசேனுடன் வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, சம்பவம் நடைபெற்ற நாளன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வெளியே சென்ற அவர்கள், உணவு உண்டுவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, சிறிது நேரத்திலேயே 18 வயது இளம்பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சதாம் ஹுசேன், தனது நண்பரான ஷேக் அப்துல்லாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மென்ட் போலீசார், சதாம் ஹுசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சதாம் ஹுசேன் மற்றும் உயிரிழந்த இளம்பெண் இருவருக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நடைபெற்ற நாளிலும் இருவரும் போதை ஊசி மற்றும் போதை மருந்துகள் போன்ற பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் இருவரும் உணவு உண்டதாகவும், அதற்குப் பிறகே இளம்பெண் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தியதன் விளைவாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், தனது காதலி உணவு உண்ட பிறகே மயங்கி விழுந்ததாகவும், உணவிலேயே ஏதேனும் கலப்படம் அல்லது வேறு காரணம் இருந்திருக்கலாம் என்றும் சதாம் ஹுசேன் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இந்த இளம்பெண்ணின் மரணம் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் போதைப்பொருட்களை எவ்வாறு பெற்றனர், யார் மூலம் வாங்கினர், அதற்குப் பின்னால் ஏதேனும் வலையமைப்பு உள்ளதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணை முடிவுகள் வெளியான பின்னரே, இந்த மர்ம மரணத்தின் உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago