https://republictn.com/

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது 8 வயது மகள் மேனகா, ஏற்காடு முண்டகப்பாடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

வாழவந்தி பகுதியில் இருந்து ஏற்காடு டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் தனியார் வேனில் தினமும் பள்ளிக்கு செல்வது மேனகாவின் வழக்கமாக இருந்தது.

அதேபோல் இன்று காலை அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். கீரைக்காடு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் அந்த வேனை ஓட்டி வந்தார்.

வேனில் வந்த மற்ற குழந்தைகளை பல்வேறு பள்ளிகளில் இறக்கிவிட்ட பின்னர், ஏற்காடு லேடீஸ் சீட் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே மேனகாவை இறக்கிவிட்டார்.

பின்னர், ஓட்டுநர் ரங்கநாதன் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது, வாகனத்தின் பின்புறத்தில் நின்றிருந்த மேனகாவை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், மேனகாவின் தலையின் மீது வேன் ஏறியதால் அவர் பலத்த காயமடைந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் அப்பகுதியினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மேனகாவை மீட்டு அவசர வாகனம் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேனகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்ததும், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். மேனகாவின் உடலைக் கண்டு பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு போலீசார், வேன் ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago