திமுகவின் தளபதிகளாக இருக்கும் அன்பில் மகேஷ், கே.என். நேருவுக்கு இது போதாத காலம் போல. சில நாட்களுக்கு முன்புதான் தனியார் பள்ளிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட அன்பில் கைது திமுக முகாமில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க, அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை டார்கெட் செய்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு அந்த துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை திமுக ஆட்சியிலேயே டிஜிபிக்கு கடிதம் எழுதியது. எந்தெந்த பணியிடங்களுக்கு எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? யார் யார் பணம் வசூல் செய்தது? என்பதோடு சில வாட்ஸ் அப் உரையாடல் ஆதாரங்களும் அமலாக்கத்துறை கையில் சிக்கியிருந்தது.

இருப்பினும் அமலாக்கத்துறையின் கடிதம் கிடப்பிலேயே கிடைக்க, நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் முறைகேட்டில் 1020 கோடி லாபம் பார்த்ததாக நேரு மீது குற்றம் சாட்டி அடுத்த கடிதத்தை அனுப்பியது அமலாக்கத்துறை. இரு கடிதத்தின் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதிமுக எம்பி இன்ப துரை நீதிமன்றத்தை நாடினார். கே.என்நேரு மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டுமென இன்பதுரை நீதிமன்றம் சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி நீதிபதி உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் சென்றார் கே.என்.நேரு. ஆனால் உச்சநீதிமன்றமும் வழக்கு பதிவு செய்ய எந்த தடையும் இல்லை எனக் கூறி கைவிரித்துவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்ததாக கே.என்.நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
திருச்சியில் கே.என்.நேருவின் தில்லை நகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஐந்தாம் தேதியும் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதேபோல சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடக்கின்றது. ரவிச்சந்திரன் தான் கே.என்.நேருவுக்கு வலதுகரம். அவர் மூலம் லஞ்சப்பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல முறைகேடுகள் அரங்கேறி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சோதனை இன்னும் தீவிரம் அடைந்துள்ளது.

நேருவுடன் தொடர்புடைய இரண்டு இடங்களை ரெய்டு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. வழக்கிலிருந்து தப்பிக்க கே.என்.நேரு எடுத்த முயற்சி பலன் கொடுக்காமல் போன நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு நடத்தி வருகிறது. சோதனையின் நிறைவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு லஞ்ச ஒழிப்பு போலீஸால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேரு வீட்டில் ரெய்டு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில திமுக நிர்வாகிகள் வீட்டிலும் ரெய்டு உற்சவம் நடந்து வருகிறது.
திருச்சி துறையூரில் திமுக நகர செயலாளர் முரளி வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தும் நிலையில் நாமக்கல் திமுகவின் முகமாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ மோகனூர் ராமலிங்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமலிங்கத்தின் வீடு, கட்டுமான நிறுவனம் உட்பட நான்கு இடங்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல வேலூர் திமுகவில் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக திமுகவின் முக்கிய நபராக வலம் வரும் அணைக்கட்டி நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகுந்து இருக்கிறது.
