https://republictn.com/

கோவையில் ரயில் விபத்தில் உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட 24 வயதான புகைப்படக் கலைஞர் பிரவீண், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் போட்டோ ஷூட் ஆர்டர் இருப்பதாக நம்பவைத்து வரவழைத்து, பின்னர் அவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் பிரவீண். சாய்பாபா காலனியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அவர் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. அதே பெண்ணை கரூரைச் சேர்ந்த 24 வயதான மனோஜ்குமார் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார்.

பிரவீணுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருந்த நட்பு, மனோஜ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தங்களது காதலுக்கு பிரவீண் இடையூறாக இருப்பதாகக் கருதிய மனோஜ்குமார், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, பெரிய வாடிக்கையாளர் போல் நடித்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புகைப்படப் பணி இருப்பதாகக் கூறி, இன்ஸ்டாகிராம் மூலம் பிரவீனை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார்.

அதை நம்பிச் சென்ற பிரவீணுக்கு, மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் மது அருந்தக் கொடுத்ததாகவும், பின்னர் காரிலேயே கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கொலையை விபத்து அல்லது தற்கொலை போல் காட்டும் நோக்கில், பிரவீணின் உடலை கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். பின்னர் அவ்வழியாக வந்த ரயில் உடலின் மீது ஏறிச் சென்றதால், அது ரயில் விபத்து போல தோற்றமளித்தது.

இதற்கிடையில், பிரவீண் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுபுறம், ரயில் தண்டவாளத்தில் உடல் மீட்கப்பட்டதால் போத்தனூர் ரயில்வே போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, முதன்மைக் குற்றவாளியான மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து, பிரவீணைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தற்போது அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பிரவீணின் உறவினர்கள் கடும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கொலைக்கு முக்கோணக் காதல் மட்டுமே காரணம் அல்ல என்றும், பெண் ஒருவர் உட்பட மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், பிரவீண் காணாமல் போன உடனே புகார் அளித்த போதிலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதாகவும், சிசிடிவி ஆதாரங்களைத் தாங்களே சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் இருப்பிடம் உறுதியான பிறகும், அவரை உடனடியாக கைது செய்யாமல், அவருக்கே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதால், அவர் எச்சரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்பு கிடைத்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இந்தக் கொலையில் இரண்டு பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்பதை தாங்கள் நம்பவில்லை என்றும், கூலிப்படையினர் அல்லது வேறு சிலரின் தொடர்பும் இருக்கக்கூடும் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிரவீணும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்ததாகவும், அந்த உறவை விரும்பாத சிலரின் தூண்டுதலால்தான் இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, பெண் உட்பட சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, பிரவீணின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சிங்காநல்லூர் அருகே ஹோப் கல்லூரி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பிரவீணின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோவையை உலுக்கியுள்ள இந்தக் கொலை வழக்கில், உண்மை நிலை என்ன? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago