Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசாணையை செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்கவும், “ஆதி திராவிடர் காலனி”, “வண்ணான்குளம்” உள்ளிட்ட பெயர்களுக்கு மாற்றுப் பெயர்கள் சூட்டும் பணிகளை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "ராக்கெட் விட முடியுது.. ஆனா இத பண்ண முடியாதா?  ஜங்க் உணவுகளுக்கு ஐகோர்ட் போட்ட 'ரெட் கார்டு'!"

மேலும், இந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அரசாணையை செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago