திமுக ஆட்சியிலேயே புத்தகங்களை விநியோகித்து விட்டோம் என அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் நூலகம் உள்ளிட்டவற்றுக்குப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் அளித்துள்ள விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப்பேசிய அவர், ”சர்ச்சைக்குரிய புத்தகங்கள் திமுக ஆட்சிக்காலத்திலேயே விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. அகல் விளக்கு, சிக்மா, பீனிக்ஸ் ஆகிய மூன்று பதிப்பகங்களும் எங்களுடையவைதான்.
கோவை பெரியார் நூலகத்திற்கு சர்ச்சைக்குரிய புத்தகங்கள், ஜனவரி மாத இறுதியில் ஆர்டர் கிடைத்தது. பிப்ரவரி மாத மத்தியில் அல்லது அதற்குப் பின்னர் புத்தகங்களை விநியோகம் செய்தோம். ஏப்ரல் மாதத்தில் புத்தகங்களை வழங்கினோம். ஆனால், புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்ட சரியான தேதியைத் தனது டெலிவரி சலான் ஆவணங்களைப் பார்த்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை என்னிடம் ஆர்டர் வரவில்லை. அதே நேரத்தில், மதுரை கலைஞர் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினோம். சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் என்ற அளவில் வழங்கியுள்ளோம்.
மூன்று பதிப்பகங்களும் என்னுடையவைதான்
அகல் விளக்கு பதிப்பகம், சிக்மா பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய மூன்றும் என்னுடைய நிறுவனங்கள்தான்.
சிக்மா பதிப்பகத்தை முன்பு நடத்தி வந்தது. பின்னர் அதைக் கைவிட்டுவிட்டோம். அரசு தரப்பிலிருந்து புத்தகங்களுக்கான தேவை வரும்போது ஓரிரு புத்தகங்களை அந்தப் பெயரில் அச்சிட்டு வழங்குவோம்.
எனக்கு பதிப்பகத் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறோம்.
கமிஷன் கொடுத்ததில்லை
புத்தகங்களை நூலகங்களுக்கு விற்பனை செய்வதற்காக அதிகாரிகளையோ, நூல் தேர்வுக் குழுவினரையோ தனிப்பட்ட முறையில் அணுகியதில்லை. அரசின் ஆன்லைன் டிரான்ஸ்பரன்ட் புக் போர்ட்டல் மூலமாகவே புத்தகக் கொள்முதல் நடைபெறுகிறது. எந்தப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதை நூலகத் தேர்வுக் குழுவே முடிவு செய்யும்.
அதிகாரிகளுக்கு லஞ்சமோ, கமிஷனோ கொடுத்ததில்லை. இதுவரை ஒரு ரூபாய்கூட கமிஷனாகச் செலவழித்ததில்லை. பதிப்பகங்களுக்கு கிடைக்கும் லாபமே சுமார் 10 சதவீதம் மட்டும்தான் என்பதால், அதிகாரிகள் எங்களிடம் கமிஷன் கேட்க மாட்டார்கள்.
பெரியார் நூலகத்திற்கு ரூ.17 லட்சம் புத்தகங்கள்
கோவையில் உள்ள பெரியார் நூலகத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அதனை மோகன் மறுத்துள்ளார். ”நாதாங்கள் கோவை பெரியார் நூலகத்திற்கு வெறும் ரூ.17 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மட்டுமே வழங்கினோம்” எனக் கூறியுள்ளார்.
திரிஷா விஜய், விஜய் மோகன்… யார்.?
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்ட மற்றொரு சர்ச்சை, புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் தொடர்பானது. திரிஷா விஜய், விஜய் மோகன், விஜய் பாரதி, விஜய் கணேஷ் போன்ற பெயர்களில் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ”சில எழுத்தாளர்கள் தங்களுடைய உண்மையான பெயர்களில் எழுதாமல் புனைப்பெயர்களில் எழுதுவது வழக்கம். இந்தப் பெயர்களுக்குப் பின்னால் உண்மையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை தமிழக அரசு அதிகாரிகள் யாரும் என்னை விசாரணைக்காக அழைக்கவில்லை. ஊடகங்களோ அல்லது அதிகாரிகளோ விளக்கம் கேட்டால் உரிய ஆவணங்களுடன் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்” என மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் திமுக, அதிமுக மற்றும் தவெக தரப்புகளுக்கு இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சிக்கு முன்பே இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக ஒரு தரப்பும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் முறைகேடு நடந்ததாக மற்றொரு தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், பதிப்பக உரிமையாளர் மோகனின் தற்போதைய விளக்கத்தின்படி, கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் திமுக ஆட்சிக்காலத்திலேயே விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட சரியான தேதிகள், கொள்முதல் ஆணைகள், பணம் வழங்கப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே முழுமையான உண்மை தெரியவரும்.
