சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ‘பிரேமவாசம்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், காவல்துறையினர் குழந்தைகளுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்த இல்லத்தில் மனவளர்ச்சிக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் தங்களுக்கென யாரும் இல்லை என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் போரூர் SRMC காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரியாஸ்தீன் தலைமையிலான காவல்துறையினர் இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து, இல்லத்திற்கு நேரில் சென்ற காவல்துறை அதிகாரிகள், தங்களது காக்கி உடை மிடுக்கைக் கடந்து குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி, அவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடி மகிழ்ந்தனர். மேலும், குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்றனர்.
தீபாவளியை முன்னிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறையினரே தங்களது கைகளால் பட்டாசுகளைப் பாதுகாப்பான முறையில் பற்றவைத்துக் கொடுத்து, அவர்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி, காவல்துறை சார்பில் குழந்தைகளுக்குச் சிறப்பான மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
பண்டிகை நேரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தனிமை உணர்வு ஏற்படாமல், அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட காவல்துறையினரின் இந்த மனிதநேயச் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
குறிப்பாக, மனவளர்ச்சிக் குறைபாடு கொண்ட மற்றும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு காவல்துறையினர் முன்னெடுத்த இந்த நெகிழ்ச்சியான தீபாவளிக் கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
