https://republictn.com/

நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா, சமீபத்தில் அளித்த நேர்காணலில் அரசியல், சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை, நடிகர் விஜயின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அரசியலில் பெண்கள் அதிக விமர்சனங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், பெண்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குணநலன் தொடர்பான விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

ஆண் நடிகர்கள் அரசியலிலும், சினிமாவிலும் ஒரே நேரத்தில் செயல்படும்போது யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், ஒரு பெண் நடிகை சினிமாவில் நடித்தால் மட்டுமே விமர்சிக்கப்படுவது வருத்தமளிப்பதாகக் கூறினார்.

தான் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும், அரசின் பொறுப்பை முழுமையாகச் செய்த பிறகே மீண்டும் சினிமாவிற்கு திரும்பியதாகவும் ரோஜா தெரிவித்தார். அரசுப் பொறுப்பில் இருக்கும் போது பொதுமக்களுக்காக முழு நேரமும் பணியாற்ற வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

ஆந்திரப் பிரதேச அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிகளில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகளில் உடனுக்குடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசு அதிகாரிகள் ஆட்சியில் இருப்பவர்களின் கருத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் பல நேரங்களில் கவனிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் எதிர்கொண்டதாகக் கூறிய ரோஜா, தனது குடும்பமும், தன் மீது நம்பிக்கை வைத்த மக்களும் அளித்த ஆதரவே தன்னை உறுதியாக நிற்கச் செய்ததாக தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகளை தற்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், மக்களின் அன்பே தனது மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தனது திரைப்படப் பயணம் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்ததால் நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தற்போது நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்ததால் அதில் நடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தப் படம் ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தாயின் கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அந்த வேடத்தை ஏற்றதாகவும் கூறினார்.

தனது கணவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியுடன் காதல் மற்றும் திருமணம் குறித்து பேசிய அவர், இருவரும் சுமார் 11 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டதாக நினைவுகூர்ந்தார். அந்த காலகட்டம் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியதாகவும், வாழ்க்கையின் சவால்களை இணைந்து சமாளிக்க அந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால், கோபத்தில் பேசாமல், அமைதியாக இருந்து பின்னர் விவாதித்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதே தனது வாழ்க்கை அனுபவம் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்தும் ரோஜா பாராட்டு தெரிவித்தார். விஜயை திரைப்பட படப்பிடிப்பு தளங்களில் அமைதியாக இருப்பவராக மட்டுமே பார்த்திருந்ததாகவும், ஆனால் அவரது முதல் அரசியல் உரையை கேட்டபோது, அவருக்குள் தெளிவான அரசியல் பார்வையும், மக்களுக்கான திட்டங்களும் இருப்பதை உணர்ந்ததாகவும் கூறினார்.

மக்களுக்கு பணம், பரிசு போன்றவற்றை எதிர்பார்க்காமல், நல்ல மாற்றத்தை விரும்பி விஜய்க்கு ஆதரவு அளிக்கும் மனநிலை உருவாகியுள்ளது என்பது பெரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியல் கட்சியை தொடங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருப்பது விஜயின் மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், புதிய அரசியல் தலைமையை விமர்சிப்பதை விட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும், அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, தனது புதிய திரைப்படமான ‘அன்பே டயானா’ திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடிகை ரோஜா அழைப்பு விடுத்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 minutes ago at 38 minutes ago