https://republictn.com/

சமூக நீதி துறையை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், பட்ஜெட்டுக்கு பிறகு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் வன்னியரசு கோவையில் பேட்டியளித்துள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள மாணவியர் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வன்னியரசு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விடுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தாங்களே நேரில் சென்று மாணவிகளுடன் உரையாடியதுடன், விடுதியில் வழங்கப்பட்ட உணவை உண்டு பார்த்து ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவிகளின் கோரிக்கையின் பேரில், விடுதிக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாணவிகளின் நலனில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், விடுதி வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தரம் குறைந்த உணவை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். தவறு செய்பவர்கள் எங்கும் தப்பிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

விடுதிகளில் உள்ள பொது சமையலறைகளின் தரம் உயர்த்தப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாணவிகளிடம் அலைபேசி எண்களைப் பெற்றுள்ளதாகவும், புகார் வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை ஊடகங்கள் பரபரப்புக்கான செய்தியாக மாற்றாமல், ஆக்கபூர்வமான செய்தியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், வரும் பட்ஜெட்டுக்குப் பிறகு இந்தத் துறைக்கு மேலும் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago