தமிழ்நாடு கனிம வளத்துறையில் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட அதிகாரிகள் வரை மாசத்திற்கு ஒருமுறை தூக்கியடிக்கப்படும் டிரான்ஸ்ஃபர், அதிகாரிகளை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
30+ இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி முறைகேடுகள், சட்டவிரோத கனிமக் கொள்ளை தொடர்பாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தி, முறைகேடுகளை கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நுழைந்து சோதனைகளை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையும் கனிம வளக் கொள்ளையர்களைக் குறிவைத்துதீவிரப்படுத்தியுள்ளது.
மறுபுறம், கனிம வளத்துறைக்குள்ளேயே கடுமையான சீரமைப்பு வேலைகளைச் செய்வதாகக் கூறி, ஆட்சி மேலிடம் சாட்டையைச் சுழற்றத் தொடங்கியுள்ளது.
பெரும் பணம்… திடீர் இடமாற்றம்
பல ஆண்டுகளாகக் கனிம வளத்துறையில் கோலோச்சி, பெரும் பணம் பார்த்து செட்டில் ஆன உயர் அதிகாரிகளை குறிவைத்து வெவ்வேறு மாவட்டங்களுக்கும், முக்கியத்துவமற்ற துறைகளுக்கும் தூக்கியடித்து வருகிறது ஆட்சி மேலிடம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரிதான், ஆனால் இந்த நடவடிக்கையில் நேர்மையான அதிகாரிகளும் சேர்த்து நசுக்கப்படுவதுதான் வேதனையின் உச்சம்.
10 நாட்களுக்கு ஒருமுறை டிரான்ஸ்பர்
உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை, மாசத்திற்கு ஒருமுறை எனப் பந்தாடி அலைக்கழிப்பதாகத் துறையின் உள்ளிருந்தே குமுறல்கள் வெடித்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் பேசுகையில், “ஊழலைக் கட்டுப்படுத்த, கறைபடிந்த அதிகாரிகளை மாற்றுவது நியாயமானதுதான். ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, எந்தவித முறையான விசாரணையோ, விளக்கமோ இன்றி, மாதத்திற்கு ஒருமுறை எங்களை மாற்றி அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒட்டுமொத்த அதிகாரிகளின் குடும்பங்களையும், மன அமைதியையும் சீர்குலைக்கிறது” என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
விபரீத முடிவை நோக்கி அதிகாரிகள்?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் அழுத்தம், ஒரு பக்கம் மத்திய-மாநில புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடி, இன்னொரு பக்கம் நிர்வாக ரீதியான அலைக்கழிப்புகள் என அழுத்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர் கனிம வளத்துறை அதிகாரிகள். இந்த மன உளைச்சல் தாங்க முடியாமல், சில அதிகாரிகள் விபரீதமான முடிவுகளை எடுக்கத் துணிந்ததாகவும், கடைசி நேரத்தில் சக ஊழியர்களும் குடும்பத்தினரும் அவர்களைப் பேசிப் புரியவைத்துத் தடுத்துக் காப்பாற்றியதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதிகார துஷ்பிரயோகத்தையும், கனிமக் கொள்ளையையும் ஒடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகாரிகளைத் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் செயல்பாட்டையே முடக்கிவிடும். ஊழல் ஒழிப்பு என்பது நேர்மையான பாதையில் நடக்க வேண்டுமே தவிர, அதிகாரிகளின் உயிரோடு விளையாடும் பழிவாங்கும் படலமாக மாறக் கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
