ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கொரோனா போன்ற தீவிர சுவாசப் பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முதல் உயிரிழப்பு ஜூன் 28ஆம் தேதி திருப்பதியிலிருந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 60 வயது நபருக்கு ஏற்பட்டது. இரண்டாவது உயிரிழப்பு ஜூலை 4ஆம் தேதி கடப்பா அரசு மருத்துவமனை (GGH-RIMS)யில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது நபருக்கு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவருக்கும் ஒமிக்ரான் வகையின் உருமாறிய துணை வகை வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்த, அவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV)க்கு மரபணு வரிசைமுறை (Genome Sequencing) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறையும் மாநில அரசும் அறிவுறுத்தியுள்ளன.
மேலும், கடப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறியும் பணியிலும், தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த கடப்பா மாவட்ட ஆட்சியர், உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான தீவிர உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கண்டு பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதுமானது என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
