Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை விடுத்து, தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் பதிவாகும் முதல் கொரோனா உயிரிழப்புகள் இவையாகும்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆகியோர், தயார்நிலைப் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் அல்லது கடுமையான சுவாசத் தொற்று அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்து உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த தகவல் தளத்தில் தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  ஐபிஎல் சூதாட்டம்… தாவூத் இப்ராஹிமின் மிரட்டல்..! லலித் மோடியில் அதிர வைக்கும் வாக்குமூலம்..!

அத்துடன், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகள் பொதுமக்களிடையே கட்டாயமாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago