https://republictn.com/

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான அவிநாஷ் நார்னி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பெல்வியூ (Bellevue) நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ரஜிதா சப்பிகேணி என்பவருக்கும், 2025-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் அமெரிக்கா சென்று அங்கு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால், அமெரிக்கா சென்ற சில மாதங்களிலேயே, 2025 அக்டோபர் 27-ஆம் தேதி மதியம், பெல்வியூ காவல்துறைக்கு அவிநாஷ் அவசர அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பில், தனது மனைவி ரஜிதா குளியலறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டதாகவும், நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரஜிதா உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கிய போலீசாரிடம், புதிய சூழலுக்கு பழக முடியாமல் மனஅழுத்தத்தில் இருந்த ரஜிதா, தான் வெளியே சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அவிநாஷ் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்டமாக இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், மறுநாள் வெளியான உடற்கூறாய்வு அறிக்கை விசாரணையின் திசையை முற்றிலும் மாற்றியது. ரஜிதா தற்கொலை செய்யவில்லை; கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவிநாஷ் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சம்பவ நேரத்தில் கடைக்குச் சென்றதாக அவர் கூறியது பொய்யென தெரியவந்தது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் லாக் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அவிநாஷ் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதும், வேறு யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், ரஜிதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, கடந்த சில நாட்களாக தனது கணவர் தயாரித்த ஸ்மூத்தி ஜூஸ் எப்போதும் இருமல் மருந்தைப் போல கசப்பாக இருப்பதாக, தனது தோழிக்கு அவர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி போலீசாரின் கவனத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவிநாஷின் செல்போன் அழைப்புப் பதிவுகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் கூகுள் தேடல் வரலாற்றை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்திற்கு முந்தைய நாள் “மனிதர்களை எப்படி கொலை செய்வது?”, “கழுத்தை நெரித்து கொல்வது எப்படி?”, “விஷம் கொடுப்பது எப்படி?” போன்ற தகவல்களை அவர் இணையத்தில் தேடியிருப்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி, போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே, உயிரிழந்த ரஜிதாவின் புகைப்படத்தை இந்தியாவில் இருந்த ஒரு பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த தகவல்களை ஒன்றிணைத்து விசாரணை நடத்தியபோது, அவிநாஷ் ஏற்கனவே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அவரையே திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

ஆனால், பெற்றோரின் வற்புறுத்தலால் ரஜிதாவை திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தனது காதலியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

திருமணத்தை எதிர்த்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அவமானம் ஏற்படும் என்ற அச்சத்தில், ரஜிதாவுடன் அமெரிக்காவில் வாழ்ந்தபோதும் தனது காதலியை மறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், “அவள் இன்னும் ஏன் உன்னுடன் இருக்கிறாள்? எப்போது என்னை திருமணம் செய்து கொள்வாய்?” என்று காதலி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதன்பிறகே ரஜிதாவை வாழ்க்கையில் இருந்து அகற்ற முடிவு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலில் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற திட்டம் தோல்வியடைந்ததால், சம்பவத்தன்று ரஜிதாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் அவரது உடலை குளியலறையில் வைத்து தற்கொலை போல காட்சியமைக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ரஜிதாவின் உடலை புகைப்படம் எடுத்து இந்தியாவில் இருந்த காதலிக்கு அனுப்பியபோது, “அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாளா?” என்று அந்தப் பெண் கேட்டதாகவும், அதற்கு “இல்லை… அவளது உதடுகளும் கண்களும் நீல நிறமாக மாறிவிட்டன” என்று அவிநாஷ் பதிலளித்திருந்ததாகவும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் காதலியின் தூண்டுதல் மற்றும் சதித்திட்டம் இருந்திருக்கலாம் என்பதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர்மீதும் சர்வதேச சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், விசாரணைக்கு உட்படுத்தவும் அமெரிக்க காவல்துறையினர் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.

கொலைக்குப் பிறகு, தனது செல்போனில் இருந்த வாட்ஸ்அப் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கூகுள் தேடல் வரலாற்றை அவிநாஷ் முழுமையாக அழித்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்து, இந்தியாவில் இருந்த காதலியின் மொபைல் தரவுகளையும் சர்வதேச சட்ட நடைமுறைகளின் கீழ் ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால், முழுமையான டிஜிட்டல் ஆதாரங்களை திரட்ட காவல்துறைக்கு சுமார் ஒன்பது மாதங்கள் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அறிவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களையும் சேகரித்த பின்னர், பெல்வியூ காவல்துறையினர் அவிநாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

“நான் குற்றமற்றவன்” என்று அவிநாஷ் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இருப்பினும், அவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு வாதிட்டதை ஏற்று, அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சுமார் 41 கோடி ரூபாய் பிணைத்தொகை நிர்ணயித்து, கிங் கவுண்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

ரஜிதா கொலை வழக்கின் விசாரணை இந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்க உள்ளது. வாஷிங்டன் மாநில சட்டப்படி, முதற்கட்டமாக 12 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். அரசு தரப்பு சமர்ப்பிக்க உள்ள டிஜிட்டல் ஆதாரங்கள் முழுமையாக ஏற்கப்பட்டால், அவிநாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago