Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழச்சேவல்பட்டி அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் அஸ்வின் (15), அருகிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு அஸ்வின், தனது நண்பர்களான கணேசன் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் கீழாவணிப்பட்டி கண்மாய் கரை பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகராறாக மாறியதாக தெரிகிறது.

இந்த தகராறின் போது, அஸ்வினை அவரது நண்பர்களான கணேசன் மற்றும் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கண்மாய் கரை பகுதியில் அஸ்வின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, கீழச்சேவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அஸ்வினின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க  நிர்வாகத்தில் 'சிங்கம்'… வீட்டில் பிணமாகக் கிடந்த சோகம்! கேவி குப்பம் தாசில்தார் மரணத்தில் மர்மம் என்ன..?

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அஸ்வினுடன் இருந்ததாக கூறப்படும் கணேசன் மற்றும் அரவிந்த் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

10-ஆம் வகுப்பு மாணவன் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த இந்த சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் காவல்துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. இத்தகைய குற்றச் சம்பவங்களை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago