https://republictn.com/

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், நியாயம் கேட்க வந்த பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த காயமடைந்த பார் உரிமையாளர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் பல இடங்களில் மூடப்பட்டன.

அதன்படி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமந்தாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை எண் 2325 மற்றும் அதனுடன் இணைந்த பார் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளான கார்த்திக், முத்துக்குமார், வழுப்பூரான் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மது போதையில் மூடப்பட்டிருந்த அந்த பாருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த பாதுகாவலரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாதுகாவலர் அளித்த தகவலின் பேரில், பார் நடத்துநரான மருதுமுத்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். பல மாதங்களாக மூடப்பட்டுள்ள பாரில் வந்து தகராறு செய்வது நியாயமா என்று அவர் கேட்டபோது, ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் நான்கு பேரும் தங்களிடம் இருந்த கத்தியால் மருதுமுத்துவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் வயிறு, நுரையீரல் உள்ளிட்ட நான்கு இடங்களில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த மருதுமுத்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் பாதுகாவலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, ஊதியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளான கார்த்திக், முத்துக்குமார், வழுப்பூரான் மற்றும் பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும், ஊதியூர் காவல் நிலைய ஆய்வாளர் யமுனாதேவி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பிறகு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் பார் உரிமையாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago