தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், செண்பகவல்லி அணையை சீரமைக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கேரளா – தமிழ்நாடு எல்லையோரத்தில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது செண்பகவல்லி தடுப்பணை. கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானமும், சிவகிரி ஜமீனும் இணைந்து கட்டிய இந்த அணை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பல ஆண்டுகளாக பயனளித்து வந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த செண்பகவல்லி அணை, 1773ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணை சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. அணையில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் அதன் பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதங்கள் காரணமாக, நீர்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அணை இன்று வரை முழுமையாக சீரமைக்கப்படாமல் உடைந்த நிலையிலேயே இருந்து வருகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி அணையில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் மற்றும் அதன் பிரதான கால்வாயின் சேதங்களை கேரளா மற்றும் தமிழக அரசுகள் இணைந்து உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் ஆதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் உதவியுடன் செண்பகவல்லி அணையை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல், அப்பகுதியில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்ளாறு அணைத்திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை வலியுறுத்தி, ஜூன் 5ஆம் தேதி வாசுதேவநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த வைகோ, இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந்தப் போராட்டத்தில் மதிமுக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
