தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் (சிறப்பு பதிவெண்கள்) பெறுவதற்கான கட்டணங்களை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) நிலவி வரும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்கும் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு நடைமுறையில் இருந்த நிலையான கட்டண முறைக்கு மாற்றாக, இனி வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்சி எண்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதன்படி, வாகனத்தின் மதிப்பைப் பொறுத்து குறைந்தபட்சமாக ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனங்களின் விலை ₹50,000 வரை இருந்தால், அதற்கான ஃபேன்சி பதிவு எண்ணைப் பெற ₹2,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல், வாகனத்தின் மதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கட்டணமும் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது.
30 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ஃபேன்சி எண் பெறுவதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இறக்குமதி வாகனங்களுக்கு தனித்துவமான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனங்களுக்கான சில பிரிவுகளில், ஃபேன்சி எண் பெறுவதற்கான கட்டணம் ₹16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், உயர்ரக கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கு ஃபேன்சி எண்களை பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹8 லட்சம் வரை கட்டணம் செலுத்தி ஃபேன்சி எண்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சீரிஸைத் தாண்டி எதிர்காலத்தில் வழங்கப்பட உள்ள பதிவு எண்களை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து பெறுவதற்கான கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி,
- தற்போதைய சீரிஸ் மற்றும் அடுத்த 3 சீரிஸ்களில் உள்ள சிறப்பு எண்களை முன்கூட்டியே பெற ₹80,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 5 முதல் 8 வரையிலான சீரிஸ்களில் உள்ள எண்களைப் பெற ₹1.20 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 9 மற்றும் 10-வது சீரிஸ்களில் உள்ள எண்களைப் பெற ₹2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 11 மற்றும் 12-வது சீரிஸ்களில் உள்ள எண்களை முன்பதிவு செய்து பெற ₹4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
- புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 13 மற்றும் 14-வது எதிர்கால சீரிஸ் பிரிவுகளில் உள்ள சிறப்பு எண்களை பெற அதிகபட்சமாக ₹8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை பெற விரும்புவோர் இனி குறைந்தபட்சமாக ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
