கோவாவின் புகழ்பெற்ற பாகா கடற்கரையில் (Baga Beach) பாறையின் மீது அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த 33 வயதான அஷ்பக் மசாலி (Ashpak Masali) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவத்தின்போது கடலில் அலைகள் சீற்றமாக இருந்த நிலையிலும், அவர் ஆபத்தான கடற்கரை பாறையின் விளிம்பில் அமர்ந்து ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பின்னால் இருந்து வந்த மிகப்பெரிய ராட்சத அலை பாறையில் மோதி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த பதைபதைக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.
தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடல் சீற்றம் மற்றும் உயர் அலை காரணமாக தேடுதல் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், பின்னர் அவரது உடல் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்டது.
கோடை மற்றும் பருவமழைக் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பாறைகளின் மீது ஏறுவதையும், செல்ஃபி மற்றும் வீடியோக்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
