Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஆரம்பத்தில் சாதாரண கொள்ளைக் கொலை என்று கருதப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், அந்தக் கொலையின் பின்னால் மனைவி, காதலன் மற்றும் கூலிப்படை இணைந்து தீட்டிய அதிர்ச்சி திட்டம் இருந்தது அம்பலமானது.

உயிரிழந்த தேவகுமார், பீகார் மாநில மின்சாரத் துறையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சமிதா குமாரி, சுப்பால் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இருவரும் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றியதால், வார இறுதிகளில் தேவகுமார் ரயிலில் சென்று மனைவி மற்றும் மகளைச் சந்தித்து வருவது வழக்கம். கடந்த ஜூலை 11-ஆம் தேதி, ஜனசாதாரண் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அவர், நள்ளிரவில் ககாரியா மாவட்டம் பத்லா காட் ரயில் நிலையம் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது, அதே ரயிலில் பயணம் செய்த மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், “ரயிலில் கொள்ளையர்கள் வந்துவிட்டார்கள்” என்று கத்திக்கொண்டே அந்த நபர் ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பினார்.

தவெக-வை அலறவிடத் துடிக்கும் சீக்ரெட் வீடியோ..! திமுக- ப்ளானால் உஷாரான விஜய்..! எம்.எல்.ஏ-க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!

முதலில் இது கொள்ளைக் கொலை என போலீசார் கருதினர். ஆனால், தேவகுமாரின் செல்போன், பணம் உள்ளிட்ட உடைமைகள் எதுவும் திருடப்படாததுடன், வேறு எந்த பயணியிடமும் கொள்ளை நடக்காததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, சமிதா குமாரியின் கடந்த மூன்று மாத செல்போன் அழைப்பு பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அஜித்குமார் என்பவருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டு மூலமாக இருவரும் ரகசியமாக பேசியதும் தெரியவந்தது. கொலை நடந்த நள்ளிரவிலும் இருவரும் தொடர்பில் இருந்தது தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

“ரீல்ஸுக்கு லைக்ஸ் தேடி… கடைசியில் கம்பி எண்ணிய இன்ஸ்டா பிரபலங்கள்! – சென்னையில் ₹10 லட்சம் சொகுசு பைக்குடன் ‘தரமான’ செய்கை செய்த போலீஸ்!”

விசாரணையில், 2017-ஆம் ஆண்டு பீகார் மின்சாரத் துறையில் ஒன்றாக பணியாற்றியபோது சமிதா குமாரிக்கும் அஜித்குமாருக்கும் காதல் ஏற்பட்டதும், பின்னர் 2018-ஆம் ஆண்டு தேவகுமாரை சமிதா திருமணம் செய்துகொண்ட பிறகும் அந்த உறவு தொடர்ந்ததும் தெரியவந்தது.

மனைவியின் ரகசிய உறவை அறிந்த தேவகுமார், அவரைக் கண்காணிக்கத் தொடங்கியதால், தங்களது உறவுக்கு அவர் தடையாக இருப்பதாகக் கருதிய சமிதா குமாரியும், அஜித்குமாரும், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்காக ராஜீவ்குமார் என்ற கூலிப்படை கொலையாளிக்கு ரூ.4 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். திட்டமிட்டபடி, தேவகுமார் ரயிலில் ஏறிய தகவலை சமிதா குமாரி கொலையாளிக்கு தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அதே ரயிலில் பயணம் செய்த ராஜீவ்குமார், தூங்கிக்கொண்டிருந்த தேவகுமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, கொள்ளைக் கொலை போல நாடகமாடி தப்பிச் சென்றுள்ளார்.

“சாப்பாட்டுல விஷமா? நீங்க ஆசையா வாங்குற கலர் அப்பளத்துல கலந்திருக்கும் ஆபத்து! தமிழக அரசின் அதிரடி தடை!

செல்போன் அழைப்பு பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், இந்த முழு கொலைச் சதியையும் போலீசார் அம்பலப்படுத்தினர்.

இந்த வழக்கில், சமிதா குமாரி, அவரது காதலர் அஜித்குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி ராஜீவ்குமார் ஆகிய மூவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு சாதாரண கொள்ளைக் கொலை என தொடங்கிய இந்த வழக்கு, செல்போன் அழைப்பு பதிவுகள் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கூலிப்படை கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்த சம்பவமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago