https://republictn.com/

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதிலிருந்த நிலக்கடலை தொண்டையில் சிக்கி, 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் வேங்கரா அருகே உள்ள குன்னும்புரம் அடுத்த வெல்லகடம் பகுதியைச் சேர்ந்த முனீர் – பர்சினா தம்பதியரின் 3 வயது மகன் முகமது ரிஸ்வான், வீட்டில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதிலிருந்த நிலக்கடலை எதிர்பாராத விதமாக மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டது.

நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!

இதனால் மூச்சுவிட முடியாமல் சிறுவன் திணறிய நிலையில், பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கடினமான உணவுப் பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளை வழங்கும்போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

‘மார்பை அழுத்துவதும், துப்பட்டாவை இழுப்பதும் கற்பழிப்பு ஆகாது..!’ உயர் நீதிமன்றத் தீர்ப்பால் கடுப்பான உச்ச நீதிமன்றம்..!

மருத்துவர்களின் விளக்கப்படி, குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிகவும் சிறியதாக இருக்கும். மேலும், உணவை நன்றாக மென்று விழுங்கும் திறனும், தொண்டைத் தசைகளின் ஒருங்கிணைப்பும் அந்த வயதில் முழுமையாக வளர்ந்திருக்காது. இதனால் நிலக்கடலை, முந்திரி, பாக்கு, கடினமான மிட்டாய்கள், முழு திராட்சைப்பழம், பாப்கார்ன், நாணயங்கள் உள்ளிட்ட சிறிய பொருட்கள் எளிதில் மூச்சுக்குழாயில் சிக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலக்கடலை அல்லது பிற நட்ஸ் வகைகளை முழுமையாகக் கொடுக்கக் கூடாது. அவற்றை பொடியாகவோ அல்லது விழுதாக (Peanut Butter) மாற்றியோ வழங்குவது பாதுகாப்பானது.

அதேபோல், குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, விளையாடும்போது, சிரிக்கும்போது அல்லது அழும்போது உணவு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையை நிமிர்ந்து அமர வைத்தே உணவளிக்க வேண்டும். மேலும், அவர்கள் சாப்பிடும் நேரத்தில் பெரியவர்கள் அருகில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

மிக்சர், காராபூந்தி போன்ற கடலை கலந்த நொறுக்குத்தீனிகளை சிறிய குழந்தைகளின் கைகளில் நேரடியாகக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

”தமிழ் நாட்டிலேயே சாணக்கியர் ஆட்சியை நடத்தியது மு.க.ஸ்டாலின் மட்டும்தான்..!” ஆகப் பெரிய சாதனை..?

ஒருவேளை குழந்தையின் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், முதலில் பதற்றமடையாமல் உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும்.

குழந்தையை குப்புறமாக உங்கள் கையில் படுக்க வைத்து, அதன் தலையை உடலைவிட சற்று கீழ்நோக்கி இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர், உள்ளங்கையின் அடிப்பகுதியால் தோள்பட்டைகளுக்கு இடையே 5 முறை உறுதியான ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட தட்டுகள் கொடுக்க வேண்டும். பொருள் வெளியேறும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை இதனைத் தொடரலாம்.

வாய்க்குள் சிக்கிய பொருள் தெளிவாகக் கண்ணுக்குத் தெரிந்தால் மட்டுமே அதை விரலால் எடுக்க முயற்சிக்க வேண்டும். தெரியாமல் விரலை உள்ளே செலுத்துவது அந்தப் பொருளை மேலும் ஆழமாகத் தள்ளி, நிலையை மோசமாக்கக்கூடும்.

இந்தச் சோகமான சம்பவம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலக்கடலை உள்ளிட்ட கடினமான உணவுப் பொருட்களை வழங்கும்போது பெற்றோர் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. சிறிய அலட்சியமும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உணவளிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago