பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார், உளவுத் தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படைகள் எல்லைப் பகுதியில் முன் திட்டமிடப்பட்ட தரைவழி, வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறினார்.
கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் முகாம்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு, கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கினர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் பிரதான வாயிலில் மோதியதால், பலத்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக சிந்து காவல்துறைத் தலைவர் ஜாவேத் ஆலம் ஓதோ தெரிவித்தார். அந்த வாகனம் வெடித்ததா என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவில்லை.
இந்தத் தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஒரு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலைத் தொடர்ந்து, சிறப்புப் பாதுகாப்புப் பிரிவ, பயங்கரவாத எதிர்ப்புப் படை, ரேஞ்சர்ஸ், காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சிந்து மாகாணத்தைச் சேர்ந்த மீட்புப் படை 1122 குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளைத் தொடங்கியது.
இந்தத் தாக்குதலுக்கு ஜமாத்-உல்-அஹ்ரார் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பில் இருந்து பிரிந்த ஒரு குழுவாகும். இந்தத் தாக்குதலில் தங்களது ஒன்பது பயங்கரவாதிகள் பங்கேற்றதாக அந்த அமைப்பு கூறுகிறது.
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பயங்கரவாத அமைப்புகளே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகிறது. தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்பது ஆப்கானிஸ்தான் தாலிபானிலில் இருந்து ஒரு தனி அமைப்பாகும். ஆனால் இரண்டும் கூட்டாளிகளாகக் கருதப்படுகின்றன. 2021-ல் ஆப்கானிஸ்தான் தாலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எல்லையில் பதற்றம் சீராக அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் தனது குடிமக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் கூறுகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கம் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது, இந்தக் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
கோஸ்ட், குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஜூன் 10 அன்று பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறுகிறது. இதில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் உட்பட பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
பாகிஸ்தானின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது மட்டுமே நடத்தப்பட்டு, 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிப்ரவரி மாதம் முதல், இரு நாடுகளும் பதிலடி கொடுக்கும் வகையில் பல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த எல்லை மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்று சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், நிரந்தரமான போர் நிறுத்தம் இன்னும் எட்டப்படவில்லை.
