ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து வெளியாகும் ஹம்ஷஹ்ரி (Hamshahri) நாளிதழ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களுடன் கூடிய பழிவாங்கும் பட்டியலை (Revenge List) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பழிவாங்கும் வகையில் அவரது மகனும் புதிய தலைவருமான மொஜ்தபா கமேனியின் எச்சரிக்கை செய்தியுடன் இந்த தகவல் வரைபடம் (Infographic) வெளியிடப்பட்டுள்ளது.
ஹம்ஷஹ்ரி நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம்பெற்றுள்ளார்.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள்:
- டொனால்ட் டிரம்ப் – அமெரிக்க அதிபர்
- பெஞ்சமின் நெதன்யாகு – இஸ்ரேல் பிரதமர்
- கீர் ஸ்டார்மர் – பிரிட்டன் பிரதமர்
- இம்மானுவேல் மேக்ரான் – பிரான்ஸ் அதிபர்
- ஜார்ஜியா மெலோனி – இத்தாலி பிரதமர்
- ஃபிரிட்ரிக் மெர்ஸ் – ஜெர்மனி சான்சலர்
- மார்கோ ரூபியோ – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
- பீட் ஹெக்செத் – அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
- இஸ்ரேல் காட்ஸ் – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்
- கிதியோன் சாஅர் – இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்
- இயல் ஜமீர் – இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) தலைமை அதிகாரி
- ஜெனரல் மைக்கேல் “எரிக்” குரிலா – அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி
- மைக் ஹக்கபி – இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர்
மேலும், ஈரான் போர்ச் சூழலின்போது அமெரிக்க ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதித்த ஐரோப்பிய நாடுகளும், அலி கமேனியின் மரணத்தைக் கண்டிக்காத நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இதனுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பட்டியலில் உள்ள குற்றவாளிகள் எவரும் படுக்கையில் நிம்மதியான மரணத்தைத் தழுவ முடியாது. பழிவாங்குவது எங்கள் தேசத்தின் விருப்பம்” என்று மொஜ்தபா கமேனி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்களைக் குறிவைத்து ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ள இந்தப் பழிவாங்கும் பட்டியல், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
