https://republictn.com/

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தவெக வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவைப் பெற முடியவில்லை என்பது கட்சிக்குள் நடைபெற்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கணிசமான வெற்றியைப் பெற்ற இக்கட்சி வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை. அரியலூர், விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறைந்த அளவிலான வெற்றியே கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வடமாவட்டங்களை மையமாக வைத்து புதிய அரசியல் நடவடிக்கைகளை தவெக தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக வன்னிய சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பிற கட்சிகளில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வட மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தும் வகையில் கட்சி நிர்வாக அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சில முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு வடமாவட்டங்களின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மக்கள் சந்திப்பு, நலத்திட்ட ஆய்வு, கட்சி விரிவாக்க பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளது. அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் மற்றொரு முக்கிய அம்சம், வன்னியர் சமூகத்தின் ஆதரவு தளமாக கருதப்படும் பாமக வாக்கு வங்கியை குறிவைத்து தவெக செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

வட மாவட்டங்களில் பாமக நீண்ட காலமாக வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. எனவே அந்த சமூகத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களை தங்களது பக்கம் இழுப்பதன் மூலம் எதிர்கால தேர்தல்களில் முன்னிலை பெற முடியும் என தவெக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இதுவரை பாமக தலைமையை நேரடியாக விமர்சிக்கும் அரசியல் அணுகுமுறையை தவெக கையில் எடுக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வன்னியர் சமூக வாக்காளர்களிடம் எதிர்மறையான தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு அதே நேரத்தில் கட்சியின் அமைப்பை மெதுவாக வலுப்படுத்தும் திட்டத்தில் தான் உள்ளது.

அடுத்த சில மாதங்களில் வடமாவட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சாலை, குடிநீர், தொழில் முதலீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள் மூலம் வடமாவட்ட மக்களின் ஆதரவை அதிகரிக்கும் முயற்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனிடையே வடமாநில தமிழக அரசியலில் வன்னியர் சமூக வாக்குகள் எப்போதும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்த வருகின்றன. எனவே அந்த வாக்கு வங்கியை யார் கவர்கிறார்கள் என்பது எதிர்கால தேர்தல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வட மாவட்டங்களில் தங்களது ஆதரவை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வரும் நிலையில் தவெக தீவிர களப்பணியில் இறங்கி இருப்பது அரசியல் போட்டியை மேலும் சுவாரசியமாக்கி உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து வடமாவட்டங்களில் நடைபெறும் இந்த அரசியல் நகர்வுகள் தவெகவுக்கு கை கொடுக்குமா? என்பது மில்லியன் கேள்வி.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago