https://republictn.com/

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கொள்கை முடிவு, தமிழக சட்டப்பேரவையின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து சமூகங்களுக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இடஒதுக்கீட்டைத் தொடர்வதற்கு போதுமான புள்ளிவிவரத் தரவுகள் அவசியம் என வலியுறுத்தி வருவதாகவும், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டரீதியாகப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் மாநிலத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி தமிழக அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் இத்தகைய விரிவான கணக்கெடுப்பை நடத்த தோராயமாக ரூ.700 கோடி மட்டுமே செலவாகும் என்றும், அது மாநில அரசின் நிதிநிலைக்கு பெரிய சுமையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து பாமக சார்பில் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பில் சாதி விவரங்களுடன், மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் பாமக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago