தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்று தவெக எம்.எல்.ஏ பல்லவி கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திமுக சார்பில் அவருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், “தவெக அரசுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் முற்றிலும் குழப்பத்தில் உள்ளனர். மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க முதல்வரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கூறுவது தவறு.
தமிழகத்தில் கோடைக்காலம் உக்கிரமாக இருப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோல நிலைமை இருந்தது. ஆனால் அப்போது எங்களிடம் திறமையான நிர்வாகிகளும் அதிகாரிகளும் இருந்ததால் நிலைமையை சீராக கையாள முடிந்தது.
தற்போதைய சூழலில் தவெக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. தங்கள் நிர்வாகத் தோல்வியை திசை திருப்புவதற்காக திமுக மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு திமுகவினர் தான் காரணம் என்று திருவிக நகரத் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி மிகவும் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்துள்ளார். அதற்காகத்தான் அவருக்கு தற்போது அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பல்லவி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்,” என தெரிவித்தார்.
