https://republictn.com/

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஏஐ புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல இணைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், கருணாநிதியை அவமதிக்கும் வகையில் பரப்பப்பட்ட ஏஐ புகைப்படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அதனை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புகைப்படத்தை உருவாக்கியவர்கள் மற்றும் அதனை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் வழக்கறிஞர் கணேசன் ராஜன் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில், கருணாநிதி தற்போதைய முதலமைச்சரை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தவறான மற்றும் அவமதிப்பான ஏஐ புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இது குறித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட காவல் இணை ஆணையாளர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு காரணமான சமூக வலைதள பக்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago