https://republictn.com/

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி கோவிந்தராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுவருவதாக கூறப்படுகிறது. சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், எடமணல், திருமுலைவாசல், கொண்டல், வள்ளுவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயப் பணிகளும் மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜர் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக தினமும் இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், இரவு 8.30 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மின்சாரத்துறையை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் கையில் இருந்த தீப்பந்தங்களை சாலையோர மின்கம்பங்களில் கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கூறுகையில், சீர்காழி கோவிந்தராஜர் நகரில் கடந்த சில வாரங்களாக தினமும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் பொழுதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நகராட்சி குப்பைக் குவியல் இருப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிந்தராஜர் நகர் பகுதிக்கு முறையான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago