Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tirunelveli

நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார், திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டாரத்துக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில், 250 கிலோவுக்கும் அதிகமான அழுகிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடையை மூட மாவட்ட நிர்வாகமும் உணவுப் பாதுகாப்புத் துறையும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், இந்த இறைச்சி திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு அசைவ உணவகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள், அசைவ உணவுப் பிரியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் உள்ள இறைச்சிக் கடைகளில் அழுகிய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனுக்குப் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்பேரில், நாங்குநேரி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் அஷயா தலைமையிலான அதிகாரிகள், அக்டோபர் 28ஆம் தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் மூலைக்கரைப்பட்டியில் உள்ள வானமாமலை, கொம்பையா மற்றும் சுப்பையா ஆகியோருக்குச் சொந்தமான இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படியுங்க  வேலூரில் பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை – குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்..?

இந்த ஆய்வின்போது, வானமாமலை என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இறைச்சிக் கடைக்கு அருகிலுள்ள வீட்டிலும், அங்குள்ள இறைச்சி சேமிப்புப் பகுதியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் 250 கிலோ அழுகிய இறைச்சி கண்டறியப்பட்டது.

இரண்டு பெரிய குளிர்பதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சியைத் திறந்து பார்த்தபோது, தோல் உரிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஆடுகளின் இறைச்சி இருந்ததாகவும், அவை முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அந்த இறைச்சி முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். மேலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடையை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mutton

ஆய்வின்போது, கடைகளுக்கான ஆடுகள் மேலப்பாளையம், வெங்கடேஸ்வரபுரம் மற்றும் வள்ளியூர் சந்தைகளில் இருந்து வாங்கப்பட்டு, கடைகளுக்கு அருகிலேயே அறுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நோய்வாய்ப்பட்டு இறக்கும் ஆடுகள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு ஆடுகளை வாங்கி இறைச்சியாக்கி விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  “மக்கள் கடும் எச்சரிக்கை! TVK-வில் இணைந்த முன்னாள் MLA-க்கு எதிராக போஸ்டர் போர் வெடிப்பு!”

குறிப்பாக, மூலைக்கரைப்பட்டியில் இருந்து திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு அசைவ உணவகங்களுக்கும் குறைந்த விலைக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இறைச்சி எந்தெந்த உணவகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது, எவ்வளவு காலமாக இந்த விற்பனை நடைபெற்று வந்தது, நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சி உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த முழுமையான விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஆய்வு செய்யப்பட்ட சில இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புப் பதிவு சான்றிதழ்கள் இருந்தபோதிலும், இறைச்சியைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படும் கொக்கிகள் துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டவையாக இல்லை என்றும், இறைச்சி வெட்டும் பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இறைச்சிப் பகுதிகளில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததுடன், ஆடுகள் அறுக்கப்படும் இடத்துக்கு அருகிலேயே கழிவுநீர் வடிகாலும் அமைந்திருந்ததாக அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய சுகாதாரக் குறைபாடுகள் பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இறைச்சிக் கடைகளில் உரிய சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  மாமனார் குடும்பமே தாக்கிய அதிர்ச்சி வழக்கு! நீதிமன்றம் கொடுத்த மாஸ் தீர்ப்பு!

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், அழுகிய இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அசைவ உணவுப் பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் இறைச்சிக் கடைகளை நாடும் சூழலில், இத்தகைய தகவல்கள் வெளியாகியிருப்பது கவலையை அதிகரித்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இறைச்சியின் தரம், அதன் கொள்முதல் விவரங்கள், சேமிப்பு முறைகள் மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சி உணவகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து, விதிமீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago