Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ படப்பிடிப்பில், ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் மற்றும் மகேஷ் பாபு 90-க்கும் மேற்பட்ட டேக்குகள் எடுத்ததாக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ராஜமௌலியின் முழுமைக்கான அர்ப்பணிப்பையும், அவரது பணிப்பழக்கத்தையும் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பிருத்விராஜ் பகிர்ந்துள்ளார்.

காலை 7 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பிற்காக ராஜமௌலி அதிகாலை 5.15 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாராகிவிடுவாராம். மேலும், மதிய உணவு இடைவேளையும் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுமாம்.

‘வாரணாசி’ திரைப்படத்தில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘கும்பா’ என்ற சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே உலகத்தை கட்டுப்படுத்த முயலும் சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.

வாரணாசி பின்னணியில் படமாக்கப்பட்ட ஒரு முக்கியமான காட்சிக்காக, அதிகாலை முதல் மாலை 7 மணி வரை மகேஷ் பாபுவும் பிருத்விராஜும் தொடர்ந்து நடித்துள்ளனர். இருப்பினும், அந்தக் காட்சி திருப்திகரமாக அமையவில்லை எனக் கருதிய ராஜமௌலி, மறுநாளும் அதே காட்சியை மீண்டும் படமாக்கியதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "தாயின் சம்மதம்.. ரசிகர்களின் தீர்ப்பு! ராகவா லாரன்ஸின் எமோஷனல் அரசியல் அறிவிப்பு!"

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய பிறகும், ஒரு அறிமுக இயக்குநரைப் போலவே அதே ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் துல்லியத்துடன் ராஜமௌலி பணியாற்றுவதைப் பார்த்து தான் வியந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், படத்தின் கதை விவாதத்தின்போது ஒரு பிரம்மாண்டமான காட்சியை ராஜமௌலி விவரித்தபோது, “இந்தக் காட்சியை எப்படி படமாக்கப் போகிறீர்கள்?” என்று தாம் கேட்டதாகவும், அதற்கு ராஜமௌலி, “இப்போது எனக்கே தெரியாது. ஆனால், படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற பிறகு எப்படியாவது வழியைக் கண்டுபிடித்து அதை படமாக்கி விடுவேன்” என்று பதிலளித்ததாகவும் பிருத்விராஜ் நினைவுகூர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், ராஜமௌலி கூறியதைவிட இன்னும் பிரம்மாண்டமாக அந்தக் காட்சியை உருவாக்கியிருந்தார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

நடிகர் மோகன்லாலுக்குப் பிறகு, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர்-இயக்குநர் ராஜமௌலிதான் என்றும், நடிகர்களிடம் எந்த அளவிலான உணர்ச்சி வெளிப்பாடும், குரல் ஏற்ற இறக்கமும் வேண்டும் என்பதை அவர் நேரடியாக நடித்துக் காட்டுவார் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் ஆகியோருடன் பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற சிவபக்தர் கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இதையும் படியுங்க  மீண்டும் வருகிறார் மக்கள் திலகம்..! MGR பயோபிக்கில் நடிக்கும் 'தேவர்' பட நாயகன்..!

உலகின் பல்வேறு பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பிரதேசங்கள் மற்றும் வாரணாசியின் புகழ்பெற்ற மணிகர்ணிகா காட் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும், அண்டார்டிகாவில் படப்பிடிப்பு நடத்தப்படும் முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் உலக அளவில் நான்காவது திரைப்படம் என்ற பெருமையையும் ‘வாரணாசி’ பெறவுள்ளது.

கதை அமைப்பில், கிமு 512 காலகட்ட வாரணாசி மற்றும் ராமாயணப் போர் சம்பவங்களுடன் தொடர்புடைய சில வரலாற்று மற்றும் புராண அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.1400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வாரணாசி’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago