https://republictn.com/

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சர்தார் 2’ திரைப்படம், வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி உளவுத் துறைத் திரில்லர் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜூன் 24ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பிரத்யேக வீடியோவின் மூலம் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற உளவுத் துறை பின்னணியிலான ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. ஆனால், இது வெறும் தொடர்ச்சிப் படமாக மட்டுமல்லாமல், முந்தைய கதையின் முன்கதையையும் (Prequel), தொடர்ச்சியையும் (Sequel) இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கதைக்களத்தைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

உலகளாவிய உளவுத்துறை தரவுப் போரை (Global Intelligence Data War) மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ‘பிளாக் டாக்கர்’ (Black Dagger) என்ற சக்திவாய்ந்த மற்றும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், கார்த்தி மீண்டும் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். வயதான தோற்றத்தில் நடிப்பதற்காக அவர் நீண்ட நேரம் மேக்கப் செய்து நடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் பின்னணியை பிரதிபலிக்கும் வகையில், சுமார் 15 மாதங்களாக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, 100 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை விஜய் வேலுக்குட்டி கவனித்துள்ளார்.

ரத்னகுமார், ஆஷா மீரா அய்யப்பன் மற்றும் விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’, 2026ஆம் ஆண்டின் முக்கியமான பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago